"எங்கு திரும்பினாலும் குழப்பம்.." திடீரென குவிந்த பயணிகள்.. மும்பை ஏர்போர்ட்டில் விமான சேவை பாதிப்பு
மும்பை: இடியுடன் கூடிய கனமழை காரணமாக மும்பையில் பல விமானங்கள் தாமதமாகியுள்ளன. இதனால் ஏர்போர்ட் முழுக்க பயணிகள் நிரம்பி வழிந்தனர்.
இப்போது கோடைக் காலம் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியாவில் பல இடங்களில் பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே மோசமான வானிலை காரணமாக மும்பையில் உள்ள பிரதான ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதால் அங்கே விமானச் சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மும்பை: குறிப்பாக நேற்றிரவு பல விமானங்கள் தாமதமாகின. இதனால் இரவு நேரத்தில் ஏகப்பட்ட பணிகள் ஏர்போர்ட்டில் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இன்றும் மும்பையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனென்றால், பைப்பர்ஜாய் புயல் இப்போது மிகக் கடுமையான புயலாக மாறியுள்ளது. இந்த புயல் ஜூன் 15ஆம் தேதி மேற்கு கடற்கரையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்றும் மும்பை ஏர்போர்ட்டில் விமானச் சேவை பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே நேற்று ஒரே நேரத்தில் பல விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதியை எதிர்கொண்டனர். பல்வேறு பயணிகளும் விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகச் சாடினர்.
விமான நிறுவனங்கள்: பயணிகள் பலரும் தாங்கள் பல மணி நேரம் வரை விமான நிலையத்தில் காத்திருப்பதாகவும் தங்கள் விமானம் குறித்து எந்தவொரு தகவலும் அறிவிக்கப்படவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டனர். அதைத் தொடர்ந்து விமான நிறுவனங்கள் இந்தப் பிரச்சினை குறித்து விளக்கமளித்தன. அதாவது மோசமான வானிலை காரணமாக ஓடுபாதை மூடப்படுவதால் மும்பையில் இருந்து இயங்கும் விமானங்கள் தாமதமாகவே செல்லும் என்று ஏர் இந்தியா அறிவித்தது.
இது குறித்து ஏர் இந்தியா கூறுகையில், "மோசமான வானிலை மற்றும் மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதை மூடப்பட்டதால், சில விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. சில விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன. இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத தவிர்க்க முடியாத காரணங்களால் நடந்த சம்பவம். இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.. பயணிகள் சிரமத்தைக் குறைக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கை: இண்டிகோ தரப்பிலும் விமான தாமதத்தால் ஏற்படும் வேதனை புரிவதாகவும் பயணிகளின் சிரமத்தைப் போக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டிருந்தது. இதனால் மும்பை விமான நிலையத்தில் எங்குத் திரும்பினாலும் பயணிகள் கூட்டமே இருந்தது. இது தொடர்பாகப் பல வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. விமான சேவையை மீண்டும் சீராக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் நேற்றிரவு கடும் மழை பெய்தது. பிபர்ஜாய் புயலின் தீவிரம் காரணமாக மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதிகளில் மழையை அதிகரித்துள்ளது. இதனால் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இந்த பலத்த காற்று காரணமாக மும்பையில் சில இடங்களில் மரங்கள் விழுந்தன.












Click it and Unblock the Notifications