கங்கனா ரனாவத் மீது பாய்கிறது போதைப் பொருள் வழக்கு- விசாரணை நடத்த மும்பை போலீசுக்கு மகா. அரசு உத்தரவு
மும்பை: நடிகை கங்கனா ரனாவத் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரம் குறித்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டவர் கங்கனா ரனாவத். நடிகை ரியா சக்கரபோர்த்திதான் சுஷாந்த் சிங்குக்கு போதைப் பொருள் பழக்கத்தை அறிமுகப்படுத்தியதாகவும் கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார்.

சிவசேனா- கங்கனா மோதல்
இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தற்போது ரியோ சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அத்துடன் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களையும் கங்கனா ரனாவத் முன்வைத்தார். இதனால் கங்கனாவை கடுமையாக விமர்சித்தது சிவசேனா.

ஒய் பிளஸ் பாதுகாப்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல மாறிவிட்டது மும்பை என கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்தார். இதனைக் கண்டித்து சிவசேனா கட்சியினர் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். இதனிடையே கங்கனா ரனாவத்துக்கு மத்திய பாஜக அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்தது.

உரிமை மீறல் தீர்மானம்
இந்நிலையில் கங்கனா ரனாவத் மீது மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீர் என விமர்சித்ததற்காக உரிமை மீறல் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அடுத்ததாக மும்பையில் உள்ள கங்கனாவின் அலுவலகமும் இடிக்கப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றார் கங்கனா. இந்த நிலையில் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் மும்பை வந்திறங்கினார் கங்கனா.

போதைப் பொருள் வழக்கு?
இதனிடையே 2016-ல் நடிகர் ஆதித்ய சுமன் ஒரு பேட்டியில், கங்கனா ரனாவத்துக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது; அவர்தான் தன்னை போதைப் பொருள் அடிமையாக்கினார் என குற்றம்சுமத்தி இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் அடிப்படையில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கங்கனா ரனாவத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications