தண்டவாளத்தில் விழுந்த இளைஞர் ரயிலில் நசுங்கி பலி.. சண்டையில் தம்பதி தள்ளிவிட்டது CCTV மூலம் அம்பலம்!
மும்பை: மும்பையில் உள்ள சியோன் ரயில்வே ஸ்டேஷனில், ரயில் தண்டவாளத்தில் விழுந்து, ரயிலின் அடியில் சிக்கிய 26 வயது இளைஞர் உயிரிழந்தார். சண்டையின் போது மற்றொரு நபர் அவரை தாக்கியதால் அவர் தண்டவாளத்தில் விழுந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் சியோன் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலுக்கும் ரயில் நடைமேடைக்கும் இடையே 26 வயது இளைஞர் ஒருவர் விழுந்து நசுங்கி உயிரிழந்தார். இரவு 9:15 மணியளவில், வாக்குவாதத்தின் போது ஒரு நபரால் தாக்கப்பட்டபோது, தினேஷ் நிலை தடுமாறி நடைமேடையில் விழுந்து உருண்டு, ரயிலில் சிக்கியுள்ளார்.

சியோன் ரயில் நிலைய பிளாட்பாரத்தில், இளைஞர் தினேஷ் (26) ஷீத்தல் மானே (30) என்ற பெண் மீது மோதிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. தன் மீது மோதியதால் ஆத்திரமடைந்த ஷீத்தல், தினேஷை தனது குடையால் பலமுறை அடித்துள்ளார். சிறிது நேரம் கழித்து, ஷீத்தலின் கணவர் அவினாஷ் (35) தினேஷை ஆவேசமாக அறைந்துள்ளார். இதில் நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார் தினேஷ்.
அப்போது, ரயில் ஒன்று அந்த பிளாட்பாரத்தை ஒட்டியுள்ள தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்துள்ளது. ரயில் நெருங்கியதும், அதிர்ச்சியடைந்த பயணிகள், தினேஷைக் காப்பாற்ற நடைமேடையின் விளிம்பிற்கு ஓடி வந்தனர். தினேஷ் உடனடியாக பிளாட்பாரத்தில் ஏற முயன்ற நிலையில், ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி பலமுறை உருண்டு விழுந்து ரயிலுக்கு அடியில் சென்றார்.
இந்த விபத்தில் தினேஷ் உடல் நசுங்கி பலியானார். உயிரிழந்த தினேஷ், பிரஹன்மும்பை எலக்ட்ரிக் சப்ளை & டிரான்ஸ்போர்ட் (பெஸ்ட்) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ரயில்வே போலீசார், ஷீத்தல் மற்றும் அவினாஷ் தாக்கியதில் தினேஷ் தண்டவாளத்தில் விழுந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த தம்பதியை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications