ஓடும் ரயிலில் ஸ்கேட்டிங்.. லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு கை, கால் இழந்த மும்பை இளைஞர்.. ஷாக் சம்பவம்
மும்பை: ஓடும் ரயிலில் சாகசம் செய்து மும்பை இளைஞர் ஒருவர் கை, காலை இழந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
மும்பை ரயில்நிலையத்தில் இளைஞர் ஒருவர் வேகமாகச் சென்று ரயிலை பிடித்தபடி பிளாட்பார்மில் ஸ்கேட்டிங் சாகசம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் பலரும், “மும்பையில் அதிவேகமாக பயணிக்கும் உள்ளூர் ரயில்களில் சில முட்டாள்கள் சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர். ரயிலுக்குள் அடாவடியாக நடமாடுவது, சாகசம் செய்வது போன்ற அநாகரிக செயல்கள் அதிகரிக்கின்றன. இது உயிருக்கு ஆபத்தான செயல். அவரது உயிருக்கு மட்டுமல்லாமல் மற்ற பயணிகளின் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கிறார். எனவே இந்த நபர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.” என ரயில்வேதுறை அமைச்சர், மத்திய ரயில்வே, மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை ஆகியோருக்கு டேக் செய்து புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையான நிலையில், ரயில்வே பாதுகாப்புப் படை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இதையடுத்து சாகசத்தில் ஈடுபட்ட ஃபர்ஹாத் அஸாம் ஷயிக் என்ற இளைஞரைப் பிடித்தனர். அப்போது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியும் காத்திருந்தது. தொடர்ந்து ரயில் சாகசங்களில் ஈடுபட்ட வந்த ஷயிக், ஒரு சம்பவத்தில் தன்னுடைய கை மற்றும் காலை இழந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் அதிகாரிகளிடம், “கடந்த மார்ச் 7ஆம் தேதி சேவ்ரி நிலையத்தில் வைத்துதான் முதல் சாகச செயலில் ஈடுபட்டேன். அப்போது எதுவும் ஆகவில்லை. அதை என்னுடைய நண்பன் வீடியோவாக பதிவு செய்து கொடுக்க, நிறைய லைக்ஸ் வாங்குவதற்காக சமூகவலைதளங்களில் பதிவிட்டேன். இதேபோல மஸ்ஜித் ரயில்நிலையத்தில் ஏப்ரல் 14ம் தேதி இரண்டாவது முறையாக சாகசத்தில் ஈடுபட்டேன். அதில் விபத்து நடந்துவிட்டது. அதிகாரிகள் என்னை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு என்னுடைய ஒரு கை மற்றும் ஒரு கால் இழக்க வேண்டியதாகிவிட்டது.” என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய ரயில்வே எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள வீடியோவில் ஷயிக், “சாகச செயல்களால் என்னுடைய கை, காலை இழந்துவிட்டேன். என்னை போன்று யாரும் இந்த செயல்களில் ஈடுபட வேண்டாம். இது சட்டவிரோதமானது. மேலும் உயிருக்கே ஆபத்தானது.” என்று கூறியுள்ளார். “இதுபோல யாராவது சாகச செயல்களில் ஈடுபட்டால் 9004410735/ 139 என்ற எண்ணுக்கு அழைத்து உடனடியாக தகவல் சொல்லுங்கள். பயணிகளின் பாதுகாப்பு தான் முக்கியமானது.” என்றும் மத்திய ரயில்வே கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications