பிரியாணி+ தர்பூசணி சாப்பிட்டால் மரணம்? பறிபோன 4 உயிர்கள்.. மருத்துவர்கள் தந்த மிக முக்கிய விளக்கம்!
மும்பை: மும்பை பய்தூனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், நகரம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "இரவில் தர்பூசணி சாப்பிட்டதால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது" எனச் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்பது குறித்து மருத்துவ உலகம் சில முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பய்தூனி என்ற கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கடந்த சனிக்கிழமை இரவு இந்த குடும்பத்தினர் முதலில் பிரியாணி சாப்பிட்ட நிலையில், அதைத் தொடர்ந்து தர்பூசணி சாப்பிட்டதாகவும் அதன் பிறகே உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன நடந்தது!
உயிரிழந்தவர்கள் அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரின் (35) மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள், தங்களது உறவினர்களுடன் சேர்ந்து இரவு 10:30 மணியளவில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். உறவினர்கள் சென்ற பிறகு, நள்ளிரவு 1:00 மணியளவில் குடும்பத்தினர் அனைவரும் தர்பூசணி பழத்தைச் சாப்பிட்டுள்ளனர். அதிகாலை 5:30 மணியளவில் நான்கு பேருக்கும் கடுமையான வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஜே.ஜே (JJ) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நான்கு பேருமே அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
பிரேதப் பரிசோதனை
பிரியாணி சாப்பிட்ட பிறகு அவர்கள் தர்பூசணி சாப்பிட்டதே உயிரிழப்பிற்குக் காரணம் எனத் தகவல்கள் பரவின. இதனால் பலரும் அச்சமடைந்தனர். இருப்பினும், தர்பூசணி இதற்குக் காரணமில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, நான்கு பேரின் சிறுநீரகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களுக்குக் கடுமையான புட் பாய்சனிங் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணை
சாதாரண புட் பாய்சனிங் கூட இவ்வளவு வேகமாக உயிரைப் பறிக்கும் அளவுக்குச் செல்லாது. இவர்களுக்கு சில மணி நேரத்தில் உடல்நிலை மிக மோசமான நிலைக்குப் போன நிலையில், கெமிக்கல் ஏதாவது இவர்கள் சாப்பிடும் உணவில் கலந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாகக் கூடுதல் விசாரணை நடந்து வருகிறது. இவர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்ட உறவினர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதால் மற்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உயிரிழப்பிற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் (Viscera samples) ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த அறிக்கை வந்த பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கவனம்!
இந்த உயிரிழப்பிற்கு என்ன காரணம் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்ற போதிலும் பழங்களைச் சாப்பிடும்போது சில விஷயங்களைப் பாலோ செய்ய வேண்டியது அவசியம்..!
தர்பூசணி போன்ற பழங்களை வெட்டியவுடன் சாப்பிடுவது சிறந்தது. அதிக நேரம் வெளியிலேயே வைக்கப்பட்ட பழங்களில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும்.
பழங்களைச் சாப்பிடுவதற்கு முன்பு தோலை நன்றாகக் கழுவுவது அவசியம்.
இரவில் கனமான உணவுகளுக்குப் பிறகு பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது செரிமானத்திற்கு நல்லது (ஆனால் அது மரணத்தை ஏற்படுத்தாது).
"இரவில் தர்பூசணி சாப்பிட்டால் மரணம்" என்பது சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி.. போலீசார் இது தொடர்பாக விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், வரும் நாட்களில் உண்மை காரணம் தெரிய வரும்.!












Click it and Unblock the Notifications