"இனி உன் பெயர் ஹனியா" பெண் ஊழியர்களை மலேசியா கடத்த திட்டம்? நாசிக் மதமாற்ற விவகாரத்தில் அடுத்த பூதம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஐடி நிறுவனம் ஒன்றில் நடந்த மதமாற்றம் மற்றும் பாலியல் அத்துமீறல் புகார்கள் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தும் நிலையில், இதில் வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரை மலேசியாவுக்கு அனுப்பவும் சதித் திட்டம் போடப்பட்டுள்ளது இப்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் பெண் அதிகளவில் வேலை செய்யும் துறைகளில் ஒன்றாக ஐடி இருந்தது. ஐடி நிறுவனங்கள் என்றாலே பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணமாகும். ஆனால், சமீபத்தில் நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடந்துள்ள சில சம்பவங்கள் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர்களைச் சிலர் மதமாற்றம் செய்ய முயன்றதுடன், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார்கள் எழுந்தன.

நிதா கான்
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நிதா கான், அங்கு 'புராசஸ் அசோசியேட்' ஆகப் பணிபுரிந்தவர். இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு நிதா கான் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் தொடர்ச்சியாக பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது நிதா கான் பாதிக்கப்பட்ட பெண்ணின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதுடன், அவரை மிரட்டி மதமாற்றம் செய்ய முயன்றதாக மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பகீர்
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிதா கான் புர்காவையும், மத நூல்களையும் கொடுத்து மதமாற வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.. அவற்றை இப்போது போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை 'ஹனியா' என மாற்ற முயற்சி நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவரின் மொபைலில் சில மத ரீதியான செயலிகளை இன்ஸ்டால் செய்ததோடு, இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் லிங்குகளை அனுப்பி மூளைச்சலவை செய்ய முயன்றுள்ளார்.
தான் கருவுற்று இருப்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என நிதா கான் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுவைக் கடந்த வாரம் தான் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. நிதா கான் இப்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மலேசியா அனுப்பத் திட்டம்
நிதா கானின் சகோதரர் டேனிஷ் ஷேக், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஏற்கனவே திருமணமான டேனிஷ் ஷேக்கின் உண்மை முகம் தெரிந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணை இம்ரான் என்பவரிடம் வேலைக்குச் சேர்ப்பதாகக் கூறி மலேசியாவுக்கு அனுப்பவும் அவர்கள் திட்டமிட்டது அம்பலமானது.
இந்த விவகாரத்தில் மற்றொரு நபரான தௌசிப் பிலால் அத்தார், பாதிக்கப்பட்ட பெண்களின் அந்தரங்கத் தகவல்களை குடும்பத்தினரிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார். இப்படி இந்த விவகாரத்தில் தோண்டத் தோண்டப் பூதங்கள் கிளம்பிக் கொண்டே இருக்கிறது.
போலீஸ் விசாரணை
இந்த விவகாரத்தில் இதுவரை 7 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 8 பேர் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் 8 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றிலேயே இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த புகார் வந்தவுடனேயே டிசிஎஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட அனைவரையும் டிஸ்மிஸ் செய்தது. மேலும், தங்கள் நிறுவனத்தில் இதுபோன்ற செயல்களுக்கு ஒருபோதும் இடமில்லை என்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications