என்சிபி தலைவர் பதவியில் விலகிய சரத்பவார்.. ‛செக்’ வைத்த உயர்மட்ட குழு.. அதிரடி முடிவு.. செம ட்விஸ்ட்!
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக சரத்பவார் அறிவித்த நிலையில் தற்போது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. இன்று கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நடந்த நிலையில் சரத்பவாரின் முடிவுக்கு ‛செக்' வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் சரத்பவார். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். பாஜகவுக்கு எதிரான சித்தாந்தத்துடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைத்து பாஜகவிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றினார். இதையடுத்து சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வரானார்.

இந்நிலையில் தான் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்எல்ஏக்கள் தனி அணியாக சென்ற நிலையில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள்ளும் குழப்பங்கள் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த குழப்பத்துக்கு முக்கிய காரணமாக சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பார்க்கப்படுகிறார்.
இதற்கிடையே தான் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 2ம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக சரத்பவார் அறிவித்தார். இதனை அவரது கட்சியை சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சரத்பவார் தான் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் சரத்பவார் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே டெல்லி அரசியலையும், அவரது அண்ணன் மகன் அஜித் பவார் மகாராஷ்டிரா அரசியலையும் கவனிக்கலாம் என கூறப்பட்டது. மேலும் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக 18 பேர் அடங்கிய உயர்மட்ட குழுவை சரத்பவார் அமைத்தார். அந்த குழு இன்று கூடியது.
இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக சரத்பவார் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும் சரத்பவார் தனது ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டதோடு சரத்பவாரின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டு, அவர் கட்சி தலைவர் பதவியில் மீண்டும் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி உயர்மட்ட குழுவில் இடம் பெற்ற அக்கட்சியின் துணை தலைவர் பிரபுல் படேல் முக்கிய விஷயத்தை கூறியுள்ளார்.

கடந்த 2ம் தேதி திடீரென சரத்பவார் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அவர் குழுவை நியமித்தார். அக்குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், நான் உட்பட பல தலைவர்கள் சரத்பவார் தலைவராக தொடர வேண்டும் என வலியுறுத்தினோம். கட்சிக்கு மட்டுமல்ல நாட்டின் நலனுக்காகவும் அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனை மற்ற கட்சி தலைவர்களும் வலியுறுத்துகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம், தேசியவாத காங்கிரஸ், நாட்டுக்கு நீங்கள் அவசியம் தேவை. நீங்கள் தான் கட்சியின் அஸ்திவாரமாக உள்ளீர்கள். உங்களுக்கு எனறு நாட்டில் நல்ல மதிப்பு உள்ளது. உங்களின் அரசியல் அனுபவம் நாட்டுக்கும், மாநிலத்துக்கும் கட்டாயம் தேவை என கோரிக்கையாக எடுத்து வைத்தோம்.
முன்னதாக எங்களிடம் எதுவும் தெரிவிக்காமல் சரத்பவார் தனது முடிவை அறிவித்துள்ளார். கட்சி தொண்டர்கள் அனைவரின் கோரிக்கைகளின் அடிப்படையில் சரத்பவாரின் ராஜினாமாவை நிராகரிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர் தனது முடிவை மாற்றி கட்சி தலைவராக தொடர வலியுறுத்துகிறோம்'' என்றார். இதன்மூலம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த சரத்பவாருக்கு அவர் அமைத்த உயர்மட்ட குழுவே ட்விஸ்ட் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications