மகாராஷ்டிரா மாநில என்சிபி தலைவராக லோக்சபா எம்.பி. சுனில் தட்கரே நியமனம்- அஜித்பவார் கோஷ்டி அறிவிப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சுனில் தட்கரே எம்பியை அறிவித்துள்ளது அஜித்பவார் கோஷ்டி.
மகாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அஜித் பவார், பிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் சரத்பவாருக்கு எதிராக ஆளும் பாஜக அரசை ஆதரிக்கின்றனர். அஜித் பவார் துணை முதல்வராகவும் 8 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்று மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசில் இணைந்தும் உள்ளனர்.

இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே உள்ளிட்ட பலரையும் அடுத்தடுத்து சரத்பவார் நீக்கி வருகிறார். பாஜக பக்கம் சாய்ந்த எம்பிக்கள், எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளையும் சரத்பவார் தரப்பு மேற்கொண்டு வருகிறது.
இதற்கு பதிலடி தரும் வகையில் அஜித்பவார் தரப்பு அதிரடியான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஜெயந்த் பாட்டீல் டிஸ்மிஸ் செய்யப்பட்டு சுனில் தட்கரே நியமிக்கப்பட்டுள்ளதாக அஜித் பவார் கோஷ்டி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரபுல் பட்டேல் கூறுகையில், தேசியவாத காங்கிரஸின் செயல் தலைவர் என்ற அடிப்படையில் ஜெயந்த் பாட்டீலை நீக்கி உள்ளேன். அவருக்கு பதில் சுனில் தட்கரேவை கட்சியின் மாநில தலைவராகவும் நியமித்துள்ளேன். ஜெயந்த் பாட்டீல் உடனடியாக கட்சியின் பொறுப்புகளை சுனில் தட்கரேவிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸின் சரத்பவார், அஜித்பவார் கோஷ்டிகள் இருதரப்பும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால் மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications