"பிளான் பி" என்ன? மகாராஷ்டிர அரசு கவிழ்ந்தால் பாஜக உடன் கை கோர்க்கும் என்சிபி? சரத் பவார் பரபர
மும்பை: மகாராஷ்டிராவில் இப்போது அரசியல் குழப்பம் தீவிரமடைந்துள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ள சில கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2019இல் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக-சிவசேனா ஒரு அணியாகவும் என்சிபி-காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் களமிறங்கின.
சட்டசபை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 105 இடங்களில் வென்ற போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களை அக்கட்சியால் கைப்பற்ற முடியவில்லை.

மகாராஷ்டிரா
தேர்தலுக்குப் பின்னர் பாஜக மற்றும் சிவசேனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த நீண்ட கால கூட்டணி முறிந்தது. 288 எம்எல்ஏக்களை கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வென்று இருந்தன. பாஜக உடன் கூட்டணியை முறித்த நிலையில், மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைத்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே முதல்வரானார்.

மாயம்
கடந்த 3 ஆண்டுகளாகக் கூட்டணி அரசு சுமுகமாகச் சென்று கொண்டு இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாகக் குழப்பம் ஏற்பட்டது. முதலில் ராஜ்ய சபா தேர்தலிலும், அடுத்து மகாராஷ்டிர மேல் சபை தேர்தலிலும் சிவசேனா உறுப்பினர்களில் சிலர் பாஜகவுக்கு வாக்களித்ததால் அக்கட்சி கூடுதலாக ஒரு இடத்தில் வென்றது. இந்தச் சூழலில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மாயமானார். சிவசேனா தரப்பால் தொடர்பு கொள்ள முடியவில்லை

கவிழும் கூட்டணி அரசு?
அவருடன் சேர்ந்து சுமார் 13 சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் மாயமானதாக கூறப்பட்டுள்ளது. சுமார் 20 எம்எல்ஏக்கள் வரை மாயமாகி இருக்கலாம் என்றும் கூட கூறப்படுகிறது. தலைமறைவான சிவசேனா எம்எல்ஏக்கள் அனைவரும் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது. பாஜகவுடன் காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்பதால் இருக்கும் ஒரே சாய்ஸ் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்.

சரத் பவார்
இந்நிலையில், இது குறித்து சரத் பவாரே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "எங்கள் கட்சி ஒன்றுபட்டு உள்ளது. ஏக்நாத் ஷிண்டே பிரச்சினை செய்வதும், இப்போது தலைமறைவாகி உள்ளதும் சிவசேனாவின் உட்கட்சி விவகாரம். அவர்கள் தங்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை விரைவில் தீர்த்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். இதையெல்லாம் பார்த்து நாங்கள் எப்போதும் பயப்பட மாட்டோம்.

வாய்ப்பில்லை
மகாராஷ்டிரா அரசு கவிழ்ந்தாலும் கூட பாஜகவுடன் செல்லும் என்ற கேள்விக்கே இடமில்லை. ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் கனவைப் பற்றி எல்லாம் எங்களிடம் ஒருபோதும் கூறவில்லை; உத்தவ் தாக்கரே நிலைமையைச் சமாளிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதனால் எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை. உத்தவ் தாக்கரே தலைமை மீது அனைவருக்கும் முழு நம்பிக்கை உள்ளது. எங்களிடம் வேறு திட்டம் எதுவும் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மூன்றாவது முறை
மேலும், மகாராஷ்டிராவில் உள்ள கூட்டணி அரசை பாஜக கலைக்க முயல்வது இது மூன்றாவது முறை என்று சாடிய சரத் பவார், முதல்வர் உத்தவர் தாக்ரே இந்த பிரச்சினையை நிச்சயம் சமாளிப்பார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார். இதற்கிடையே தலைமறைவாக உள்ள ஏக்நாத் ஷிண்டே, தனது ட்விட்டர் பயோவில் இருந்து சிவசேனா என்ற வார்த்தையை நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications