ஆஹா.! இதை நோட் பண்ணுங்க.. பீகார் எதிர்க்கட்சி தலைவர்கள் மீட்டிங் முன்.. சரத் பவார் சொன்னதை பாருங்க
மும்பை: இந்த மாதம் நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கலந்து கொள்ள உள்ள நிலையில், இது தொடர்பாக அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்குள் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்றே பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு தரப்பினும் முயன்று வருகின்றனர்.

2024 மக்களவை தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து எதிர்கொண்டால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்பதால் அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்: இருப்பினும், பல கருத்து வேறுபாடுகளால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் வரவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கவே செய்கிறது. இதனிடையே இப்போது அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டு வரும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இறங்கியுள்ளார். ஏற்கனவே அவர் நாடு முழுக்க பாஜகவுக்கு எதிரான கொள்கையில் இருக்கும் இருக்கும் அனைத்து தலைவர்களையும் நேரில் சென்று சந்தித்திருந்தார்.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் வரும் ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக எனப் பல முக்கிய கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இது எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வர உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சரத் பவார்: இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தக் கூட்டம் குறித்துக் கடந்த புதன்கிழமை நிதிஷ்குமார் என்னிடம் பேசியிருந்தார்.. நாட்டில் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் கூட்டத்திற்கு அழைத்துள்ளார்.. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள நானும் பாட்னா செல்கிறேன். தேசிய பிரச்சினைகளில் ஒன்றாகச் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதால், இதற்கு ஆதரவளிக்க வேண்டியது எங்கள் பொறுப்பு" என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த புதன்கிழமை, பீகாரில் ஆளும் கூட்டணிக் கட்சிகளான ஆர்டிஎஸ் மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பீகாரில் நடக்கும் கூட்டத்தில் காங்கிரஸ் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவித்தனர். இது அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வியூகத்தை வகுக்க உதவும்.
மாபெரும் கூட்டம்: மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி. கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், என்சிபி தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா (யுபிடி) குழு தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டம் முதலில் ஜூன் 12ஆம் தேதி நடக்க இருந்தது. இருப்பினும், ராகுல் காந்தி வெளிநாட்டில் இருப்பதாலும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வேறு திட்டம் இருப்பதாலும் நிகழ்ச்சியைத் தள்ளிவைக்குமாறு இரு தரப்பும் கோரிக்கை விடுத்தன. அதைத் தொடர்ந்து ஜூன் 12ஆம் தேதியில் நடக்கவிருந்த இந்த கூட்டம் ஜூன் 23ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications