இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?
மும்பை: லண்டனில் இருந்து நேபாளம் வழியாக தாய்நாடு செல்ல இருந்த பாகிஸ்தான் பெண் பயணி, மும்பை விமான நிலையத்தில் 10 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அல்லவா இருக்கிறோம்? என பயந்து கொண்டே இருந்தவருக்கு மறக்க முடியாத அனுபவம் ஏர்போர்ட்டில் கிடைத்துள்ளது. இது குறித்து அந்த பெண் இணையத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இந்தியா சகோதரத்துவத்துடனே அனைத்து அண்டை நாடுகளையும் பார்த்தாலும் பாகிஸ்தான், இந்தியாவை எதிரியாக கருதிக் கொண்டு சதிவேலைகளை அரங்கேற்றுகிறது. பாகிஸ்தானின் சதிகளுக்கு இந்தியா தக்க பதிலடியையும் கொடுத்து வருகிறது.
பாகிஸ்தானின் திமிர்த்தனத்திற்கு இந்தியா கொடுக்கும் பதிலடி நடவடிக்கை அந்த நாட்டின் அரசுக்கு எதிரானது மட்டுமே மக்களுக்கு எதிரானது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மும்பையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

வியந்து போன பாகிஸ்தான் பெண்
பாகிஸ்தானை சேர்ந்தவர் வன்சிபா. லண்டனில் வசித்து வரும் இவர் இன்ஸ்டாவிலும் பிரபலமானவராக உள்ளார். இவர் லண்டனில் இருந்து நேபாளம் வழியாக பாகிஸ்தானுக்கு செல்ல திட்டமிட்டார். லண்டனில் இருந்து வந்த விமானம் டிரான்சிஸ்ட்டிற்காக மும்பையில் இறங்கியது. மும்பையில் இருந்து 10 மணி நேரம் கழித்தே டிரான்சிஸ்ட் விமானம் நேபாளம் புறப்பட்டுள்ளது.
இதனால், மும்பையில் 10 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் வன்சிபா. இந்தியாவில் அல்லவா இருக்கிறோம்.. மக்கள் தன்னை எப்படி நடத்துவார்களோ என்று பயத்துடனும் படபடப்புடனும் இருந்த வன்சிபாவிற்கு நடந்த சம்பவங்கள் அனைத்தும் வியப்பை கொடுத்துள்ளன.
இந்தியர்களின் உபசரிப்பு அற்புதமாக இருந்தது
இது குறித்து வன்சிபா கூறுகையில், "துவக்கத்தில் இருந்தே நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பு நாடுகள் இல்லை. ஆனால், இந்த நடைமுறை நான் எதிர்பார்த்ததைவிட ரொம்பவே எளிதாக இருந்தது. சோதனையின் போது கூட ஊழியர்கள் மென்மையாக நடந்து கொண்டார்கள். இந்தியர்களின் உபசரிப்பு அற்புதமாக இருந்தது.
மீண்டும் ஒருமுறை இந்தியா வர ஆசைப்படுகிறேன்" என்று பதிவிட்டு இருந்தார். வன்சிபாவின் இந்த பதிவு இணையவாசிகள் மத்தியில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் வன்சிபாவின் பதிவுகளுக்கு பாசிட்டிவ் கமெண்ட்டுகளை கொட்டி வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், 'அடுத்த முறை வன்சிபா இந்தியாவுக்கு வருகை தர வேண்டும். விமான நிலையத்தை தாண்டியும் அவர் வருகை தந்தால், நாட்டின் பன்முகத்தன்மையையும் விருந்தோம்பலையும் முழுமையாக உணர முடியும்." என்று பதிவிட்டுள்ளார்.
எந்த நாட்டிலும் கிடைக்காத ஒன்று
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "நான் இந்தியாவுக்கு இதுவரை 10 க்கும் மேற்பட்ட முறை சென்றுள்ளேன். அமிர்தசரஸ், மஜிதா, டெல்லி, மும்பை, கோவா, நைனிடால் என பல இடங்களுக்கும் சென்றுள்ளேன். இந்திய மக்கள் காட்டிய அன்பு என்னை பிரமிக்க வைத்தது. அவர்கள் காட்டிய விருந்தோம்பலும் வேறு எந்த நாட்டிலும் கிடைக்காத ஒன்று" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், சட்டப்பூர்வமாக இந்தியாவுக்கு வரும் எந்த ஒரு வெளிநாட்டினரும் கவலைப்பட வேண்டியது இல்லை. பாகிஸ்தானாக இருந்தாலும் வேறு எந்த நாட்டினராக இருந்தாலும் சரி.. உங்கள் பயணத்தை நீங்கள் ரசித்து செல்லலாம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications