புறாவை கைது செய்த போலீஸ்! 8 மாதங்களுக்கு பின் விடுதலை! விசாரணையில் ட்விஸ்ட்.. இப்படியுமா நடக்கும்?
மும்பை: சீனாவுக்காக உளவு பார்த்ததாக எழுந்த புகாரில் மும்பை போலீசாரால் சிறை வைக்கப்பட்ட புறா 8 மாத விசாரைணக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் தொடர்பு துறை வளராத முன்காலத்தில் தூது அனுப்பி மக்கள் செய்திகளை பரிமாறி வந்தனர். ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு ஒற்றர்கள் சென்று தகவல் சொல்லி வந்தனர். மேலும் பறவைகள் மூலம் குறிப்பாக புறாக்கள் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டன.

அதாவது சொல்ல வேண்டிய செய்திகளை காகிதத்தில் எழுதி அதனை புறாக்கள் மீது கட்டிவிட்டு தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைமுறை மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நடைமுறையில் இருந்தது. தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை என்பது அதிக வளர்ச்சியை கண்டுள்ளது.
இதனால் நினைத்தவுடன் ஒருவருடன் செல்போன் மூலம் நாம் தகவல்களை பரிமாறி கொள்ள முடிகிறது. இருப்பினும் கூட எதிரி நாடுகளை சில நாடுகள் பறவைகள் மூலம் உளவு பார்ப்பதாக கூறப்படுகிறது. அதாவது உளவு கருவியை பறவையின் உடலில் பொருத்தி எதிரி நாட்டுக்கு அனுப்பி தங்களுக்கு வேண்டிய தகவல்களை சேகரிக்க சில நாடுகள் முயல்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இத்தகைய சூழலில் தான் மும்பையில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது மும்பை புறநகரான பிர்பா ஜெட்டி துறைமுக பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புறா ஒன்று சுற்றி வந்தது. அந்த புறா பார்க்க வித்தியாசமாக இருந்தது. புறாவின் கால்களில் 2 வளையம் இருந்தது. ஒன்று செம்பு உலோகத்தாலும், இன்னொன்று வெள்ளியாலும் செய்யப்பட்டு இருந்தது. மேலும் புறாவின் இறக்கையில் சீன எழுத்துக்களில் எழுதப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த புறாவை போலீசார் பிடித்தனர்.
இந்தியா-சீனா இடையே தொடர்ந்து மோதல் என்பது இருந்து வருகிறது. அவ்வப்போது இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து உரிமை கொண்டாடும் சீனா, இந்திய ராணுவத்துடன் எல்லையில் சண்டையிட்டும் வருகிறது. இத்தகைய சூழலில் இந்த புறா மும்பையில் சிக்கியது. இதனால் புறா மூலம் சீனா உளவு பார்க்கிறதா? என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து புறாவை போலீசார் சிறை வைத்தனர். மும்பை பரேல் பகுதியில் உள்ள விலங்குகளுக்கான பாய் சகர்பாய் டின்ஷா பெட்டிட் மருத்துவமனை கூண்டில் புறா சிறை வைக்கப்பட்டது.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து புறா குறித்த விபரங்களை போலீசார் திரட்ட தொடங்கி விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் அந்த புறா உளவுப்புறா இல்லை என்பது தெரியவந்தது. அதோடு அது சீனாவில் இருந்து வரவில்லை என்பதும் உறுதியானது. மாறாக அந்த புறா சீனாவின் அண்டை நாடான தைவானை சேர்ந்ததும் என்பதும், தைவானில் பங்கேற்ற நிலையில் அந்த புறா வழிதவறி மும்பைக்கு வந்து போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த புறாவை 8 மாதங்களுக்கு பிறகு போலீசார் விடுவித்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தமட்டில் உளவு பார்ப்பதாக எழும் சந்தேகத்தால் புறாக்கள் சிறை வைக்கப்படுவது ஒன்றும் புதிது அல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2016ல் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வாசகத்துடன் பறந்த புறாவை எல்லை பாதுகாப்பு படையினர் சிறைபிடித்தனர். அதற்கு முன்பாக கடந்த 2010ம் ஆண்டு சிவப்பு நிற சீல் பொறிக்கப்பட்ட புறா ஒன்று காலில் மோதிரம், பாகிஸ்தான் நாட்டு தொலைபேசி எண் மற்றும் முகவரியுடன் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பறந்த நிலையில் அதுவும் பிடித்து சிறை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications