மும்பை தாக்குதலுக்கு பிறகு பதிலடி கொடுப்பதை தடுத்தது யார்: காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி கேள்வி!
மும்பை: 2008 ஆம் ஆண்டில் மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீதான தாக்குதல் முடிவை கைவிட யார் காரணம் என்பதை காங்கிரஸ் கட்சி விளக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் ரூ.19,650 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துப் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் திறன், வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, புதுமை கண்டுபிடிப்புத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட குறுகிய கால வேலைவாய்ப்புத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மும்பை நாட்டின் பொருளாதார தலைநகரம் மட்டுமல்ல, இந்தியாவின் மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்று. 2008-ல் பயங்கரவாதிகள் மும்பையைத் தாக்கியதற்கு இதுவே காரணம். ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு பலவீனத்தின் செய்தியை வழங்கியது.
சமீபத்தில் இது தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சர், மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு நமது பாதுகாப்புப் படைகள், பாகிஸ்தானைத் தாக்க தயாராக இருந்தன. ஆனால், வேறொரு நாட்டின் அழுத்தம் காரணமாக அப்போதைய காங்கிரஸ் அரசு நமது பாதுகாப்புப் படைகளைத் தடுத்தது என கூறியுள்ளார்.
ஒரு வெளிநாட்டு சக்தியின் அழுத்தத்தின் கீழ் யார் இந்த முடிவை எடுத்தார்கள் என்பதை காங்கிரஸ் சொல்ல வேண்டும். நாடு அதை தெரிந்துகொள்ள உரிமை உண்டு. காங்கிரஸின் பலவீனம், பயங்கரவாதிகளைப் பலப்படுத்தியது. இந்த தவறுக்கு நாடு மீண்டும் மீண்டும் உயிர் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. எங்களைப் பொறுத்தவரை, தேசியப் பாதுகாப்பு மற்றும் நமது குடிமக்களின் பாதுகாப்பைவிட வேறு எதுவும் முக்கியமில்லை.
எங்களை பொறுத்தவரை நாடு மற்றும் மக்களின் பாதுகாப்பை தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை. வளர்ந்த பாரதம் என்பதன் கொள்கை, வளர்ச்சி மற்றும் வேகம். சில தலைவர்கள் வளர்ச்சியை விட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். திட்டங்களுக்கு தடை ஏற்படுத்துவதுடன் அவர்கள் ஊழலிலும் ஈடுபடுகின்றனர். "எனத் தெரிவித்தார்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கடந்த 2008, நவம்பர் 26 அம் தேதி மும்பையின் முக்கிய இடங்களில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்.
அண்மையில் இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசியிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும்போதே கூட ராணுவ பதிலடி கொடுப்பது தொடர்பாகப் பிரதமர் விவாதித்தார். நீண்ட விவாதம் இது தொடர்பாக நடந்தது. இறுதியில் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய வெளியுறவு சேவை கேட்டுக் கொண்டதால் பதிலடி கொடுக்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
அப்போது போரைத் தொடங்க வேண்டாம் என்று அறிவுறுத்தல் உலகம் முழுவதும் இருந்து டெல்லிக்கு வந்தன. அப்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த கொண்டலீசா ரைஸும் எங்களிடம் பேசினார். இதன் காரணமாகவே ராணுவ ரீதியான பதிலடி வேண்டாம் என முடிவெடுத்தோம்" எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications