சிக்கி சின்னாபின்னமான சிவசேனா, என்சிபி.. லோக்சபா தேர்தலில் பாஜக ரூட் ஈஸி! மாநில கட்சிகள் கதி?
மும்பை: மகாராஷ்டிராவின் மாநில கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸை பாஜக உடைத்துள்ள நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் பங்குதான் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த பாஜக தலையீடு காரணமாக சிவசேனா கட்சி இரண்டாக உடைந்த நிலையில், இந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக இரண்டாக உடைத்து இருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில், மகாராஷ்டிராவின் 2 பிரதான மாநில கட்சிகள் உடைந்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
பல மாநிலங்களில் என்னதான் தேசிய கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், மாநில மக்களின் உணர்வுகளை முழுமையாக உணர்ந்து அதற்கு ஏற்ப செயல்படுவது மாநில கட்சிகள்தான். எதிரெதிர் கட்சிகளாக இருந்தாலும் தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு ஆதரவு போன்ற விவகாரங்களில் மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுகவின் நிலைபாட்டை வைத்து இதை புரிந்துகொள்ளலாம்.

மகாராஷ்டிராவில் இப்படிப்பட்ட மாநிலக் கட்சிகளாக தேசியவாத காங்கிரஸும் சிவசேனாவும் இருந்தன. காங்கிரஸும் பாஜகவும் இம்மாநிலத்தில் கோலோச்சினாலும், இவ்விரு மாநிலக் கட்சிகளும் ஆட்சியை முடிவு செய்யும் இடத்தில் இருந்தன. தற்போது இவ்விரு கட்சிகளும் சிதறிக் கிடப்பதால் 2024 மக்களவைத் தேர்தலில் அவர்களின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
இரு கட்சிகளின் பிளவிலும் சில ஒற்றுமை உள்ளது. இரண்டும் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தவை. இரண்டையும் உடைத்தது பாஜக. இரண்டு கட்சிகளின் தலைமையும் பாஜகவோடு இணையவில்லை. தலைவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் மூலமாக எம்.எல்.ஏக்களை பாஜக கவர்ந்து உள்ளது.
இரு கட்சிகளும் உட்கட்சி விவகாரங்களில் உள்ள பூசல்களில் கவனம் செலுத்தவில்லை. தங்களின் முதன்மையான மதிப்புகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை. பாஜகவின் அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வோடு இல்லை. இரு கட்சிகளுமே தங்கள் கட்சியை வளர்ப்பதிலும் கடந்த சில ஆண்டுகளாக கோட்டை விட்டுள்ளன.
இதுகுறித்து முன்னாள் அரசு அதிகாரி தெரிவிக்கையில், "அனைவருமே அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு அஞ்சி பாஜகவின் பின்னால் செல்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. சிவசேனாவின் தீவிர ஆதரவாளர்கள் இந்துத்துவ கொள்கையை ஏற்றவர்கள். ஆனால், முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக அதில் சமரசம் செய்து காங்கிரஸுடன் கூட்டணி வைத்தார்.
அவரின் இந்த திடீர் மாற்றம் சிவசேனாவின் அடிமட்ட தொண்டர்களை குழப்பியது. அதேபோல் ஏக்நாத் ஷிண்டேவின் கூர்மையான இறகுகளை ஒடிக்காமல் அப்படியே விட்டுவிட்டார் ஏக்நாத் ஷிண்டே. சரத் பவாருக்கும் இதே நிலைதான். அவர் தனது மருமகன் அஜித் பவாரை சமாதானம் செய்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தவறிவிட்டார்." என்றார்.

இரு கட்சிகளுக்கும் ஏற்பட்டு உள்ள பின்னடைவு மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு எதிரான மகா விகாஷ் அகாடி கூட்டணியின் ஆன்மாவை எடுத்துள்ளது. இதில் 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று சரத் பவார் எதிர்பார்த்து காத்திருந்த சூழலில் இப்படிப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.
கடந்த 1960 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி மாநிலக் கட்சிகளை ஒடுக்க மேற்கொண்ட உத்திகளையே தற்போது பாஜக செய்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். மகாராஷ்டிராவின் அரசியல்வாதிகள் கடந்த 20 ஆண்டுகளாக கொள்கை, கட்சி கட்டமைப்பு, மக்கள் கருத்து போன்றவற்றை மதிப்பதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் இருப்பதால் மராதா சமூகத்தினரிடையே பாஜகவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மராத்தா சமூகத்தினர்தான் மகாராஷ்டிராவின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications