‛‛ராபின் ஹூட்’’ ஸ்டைல்.. செல்வந்தர்களிடம் திருடிய பணத்தில் ஏழைகளுக்கு உதவி.. தட்டித்தூக்கிய போலீஸ்
மும்பை: பிரபல கொள்ளையன் என அறியப்படும் ‛ராபின் ஹூட்' ஸ்டைலில் திருடிய பணத்தை ஒருவர் ஏழை மக்களுக்கு வழங்கிய நிலையில் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரொக்கப்பணம் உள்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
‛‛ராபின் ஹூட்...''பெரும் பணக்காரர்களிடம் கொள்ளையடிக்கும் பொருட்களை ஏழைகளுக்கு வழங்கி வாழ்க்கை நடத்திய நபர் என பல கதைகளில் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இவர் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் இவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவர் தான் திருடிய பணத்தில் குறிப்பிட்ட பகுதியை ஏழைகளுக்கு வழங்கிய நிலையில் திருட்டு வழக்கு தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:

ரூ.80 ஆயிரம் திருட்டு
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே ராம்தேவ் நகர் கார்டனில் வசித்து வருபவர் முகமது அகில் அப்துல் மஜித். இவரது வீட்டில் கடந்த 10ம் தேதி திருட்டு நடந்தது. வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் ரூ.80 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுபற்றி அறிந்து அதிர்ச்சியடைந்த முகமது அகில் அப்துல் மஜித் தரப்பு போலீசில் புகார் செய்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஒருவர் கைது
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் தான் முகமது அகில் அப்துல் மஜித் வீட்டில் திருடியதாக தவ்சீப் கான் என்ற கோடா என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் 12 வீடுகளில் திருடியது தெரியவந்தது. மேலும் அவர் கஞ்சா போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்தது.

ஏழைகளுக்கு ரூ.35 ஆயிரம்
மேலும் சமீபத்தில் ரூ.80 ஆயிரம் திருடிய அவர் அதில் ரூ.35 ஆயிரத்தை ஏழைகளுக்கு வழங்கி உள்ளார். சாலையோரம் வசித்து கொண்டு உணவுக்கு கஷ்டப்பட்டு வரும் மக்களுக்கு அவர் பணம் வழங்கி உள்ளது தெரியவந்தது. நாக்பூர் அருகே காம்ப்டீ பகுதியில் உள்ள சாய்லப் நரை சேர்ந்தவர். குற்ற செயல்களில் ஈடுபட்டதால் அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ரூ.4.17 லட்சம் பறிமுதல்
மேலும், தற்போது தவ்சீப் கான் என்ஐடி கார்டன் பகுதியில் சாலையோரம் வசித்து வருவதும், அந்த பகுதியில் சுற்றி வரும் அவர் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. இவர் கடந்த 5 ஆண்டுகளாக ஆசீப் என்ற புர்யா என்ற நபருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். கைதானவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கம் உள்பட ரூ.4.17 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications