வாட்டிய வறுமை.. பால் பாக்கெட் விற்று கிரிக்கெட் கிட் வாங்கிய ரோகித் சர்மா.. உருகிய பிரக்யான் ஓஜா!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா இளம்வயதில் கிரிக்கெட் உபகரணங்கள் வாங்க பணமின்றி பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்தார் என்பது உள்பட பல்வேறு உருக்கமான விஷயங்களை முன்னாள் இந்திய வீரர் பிரக்யான் ஓஜா கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என 3 வகையான போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. இவர் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். 2008ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி துவங்கினாலும் கூட மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை எட்டிப்பிடிக்க 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது.
அதாவது 2013ல் தான் மும்பை இந்தியன்ஸ் முதல் முதலாக சாம்பியன் பட்டம் வென்றது. அதுவும் ரோகித் சர்மா தலைமையில். அதாவது ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

ரோகித் சர்மா தலைமையில் மும்பை
தற்போது வரை 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல்லில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2013க்கு பிறகு 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இருப்பினும் கடந்த 2 சீசன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகவும் மோசமாக அமைந்தது. 2021ல் புள்ளி பட்டியலில் 5ம் இடம் பிடித்து லீக் சுற்றோடு வெளியேறிய மும்பை அணி, கடந்த ஆண்டு புள்ளிகள் பட்டியலில் கடைசி இடம் பிடித்து லீக் சுற்றோடு வெளியேறியது.

ரோகித் சர்மா பற்றிய தகவல்
இந்நிலையில் தான் இந்த மாத இறுதியில் துவங்கும் ஐபிஎல் சீசனில் ஜொலித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இதற்கிடையே தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா பற்றி முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ரோகித் சர்மா தனது இளம்வயதில் கிரிக்கெட் விளையாட தேவையான கிட் வாங்க பால் பாக்கெட் விற்பனை செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், ரோகித் சர்மாவின் நண்பருமான பிரக்யன் ஓஜா பகிர்ந்துள்ளார்.

பிரக்யான் ஓஜா பேட்டி
இதுதொடர்பாக பிரக்யன் ஓஜா ஜியோ சினிமா இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ளார். இதுபற்றி கூறியதாவது: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் அற்புதமாக உள்ளது. உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக தற்போது பாராட்டப்பட்டு வருகிறார். எனக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையேயான தொடர்பு மிகவும் நீண்டது.

பேட்டிங் வெறித்தனமாக இருக்கும்
15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அணியில்தான் நான் ரோகித் சர்மாவை முதலில் பார்த்தேன். அப்போதே அவரை சிறந்த ஆட்டக்காரர் என பலரும் பாராட்டுவார்கள். ரோகித் சர்மா வித்தியாசமான மும்பைக்காரர். அதிகமாக பேசமாட்டார். ஆனால் அவரது பேட்டிங் வெறித்தனமாக இருக்கும். குறிப்பாக எனது பந்துவீச்சையெல்லாம் அவர் சிக்சர், பவுண்டரிக்கு ஆக்ரோஷமாக பறக்க விட்டிருக்கிறார். ஆனாலும் ரோகித்துக்கு எதிராக விளையாடி அவரது விக்கெட்டையே நான் வீழ்த்தி இருக்கிறேன்.

பால் பாக்கெட்
அன்று முதல் எனக்கும் ரோகித்திற்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. ரோகித் சர்மா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் கிட் வாங்குவது பற்றி பேசினோம். அப்போது ரோகித் சர்மா மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பால் பாக்கெட் டெலிவரி செய்ததாக தெரிவித்தார். இன்றைக்கு அவரது வளர்ச்சியை பார்க்கும்போது எனக்கு வியப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

மிமிக்ரி செய்யும் ரோகித் சர்மா
நான் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறேன். மேலும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடும்போது எங்களுக்கு பதற்றம் இருக்கும். அப்போது ரோகித் சர்மா மிமிக்ரி செய்து அனைவரையும் சிரிக்க வைப்பார். உண்மையில் ரோகித் சர்மா சிறந்த வீரர்'' என்றார்.












Click it and Unblock the Notifications