அடுக்குமாடி வீடுகள்.. குவிந்து கிடந்த தங்கம்.. கட்டுக்கட்டாக பணம்.. கோடிகளை குவித்த இன்ஸ்பெக்டர்
மும்பை: மகாராஷ்டிராவில் லஞ்ச வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. குவியல் குவியலாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது. ரொக்கமாக மட்டும் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக 52 வயதாகும் ஹரிபாவு காடே என்பவர் பணியாற்றி வந்தார். இவரை குற்ற வழக்கு ஒன்றில் தொடர்புடைய 2 பேரை அணுகியுள்ளார்கள். வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க அவரிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் தனக்கு ரூ.1 கோடி லஞ்சமாக தருமாறு கேட்டு உள்ளார். இதற்கு அவர்கள் நடத்திய பேரத்தில் ரூ.30 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

முதற்கட்டமாக ரூ.5 லட்சம் தருவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிபாவு காடேவிடம் தெரிவித்தனர். பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத இருவரும் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்சஒழிப்பு போலீசார் கொடுத்த யோசனைப்படி இருவரும் லஞ்சப்பணத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிபாவு காடேவை சந்தித்து கொடுக்க காவல் நிலையம் சென்றனர்.
அப்போது, அவர் அங்கு இல்லாததால் இருவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிபாவு காடேவை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் அப்போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் பணத்தை அங்கிருந்த குஷாக் ஜெயின் என்பவரிடம் கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து இருவரும் லஞ்சப்பணத்தை குஷாக் ஜெயினிடம் கொடுத்தனர். பணத்தை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் குஷாக் ஜெயினை கைது செய்தார்கள்.
மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிபாவு காடேவை கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். பின்னர் சாணக்கியபுரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இச்சோதனையில் அங்கு கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 கோடியே 8 லட்சம் பணத்தை கைப்பற்றினார்கள். மேலும் ரூ.72 லட்சம் மதிப்புள்ள 970 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள், நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளியையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் வீட்டில் இருந்த சொத்து பத்திரங்களை பார்த்த போது, சொந்தமாக 4 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் மற்றும் கடை போன்றவை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அனைத்தையும் போலீசார் அப்படியே எடுத்து சென்றனர். இந்த விவகாரத்தில் தலைமறைவான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிபாவு காடே அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications