காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் வெளியேற்றம்..இப்பவும் சினிமா எடுங்க- மத்திய அரசு மீது சிவசேனா அட்டாக்
மும்பை: ஜம்மு காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் மீண்டும் வெளியேற்றப்படும் நிலையில் தற்போதைய சூழ்நிலையை வைத்தும் காஷ்மீர் ஃபைல்ஸ் படம் போல மற்றொரு திரைப்படம் எடுக்கலாமே என்று மத்திய பாஜக அரசை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குடியேற்றப்பட்ட பண்டிட்டுகளுக்காக பல்வேறு நலத் திட்ட உதவிகளை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னடைவாக கடந்த சில மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களில் 13 பண்டிட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் இந்த வெறிச்செயலால் ஜம்மு காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் மீண்டும் இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரானது மீண்டும் 1990களை நோக்கி செல்வதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
இந்நிலையில் காஷ்மீர் பண்டிட்டுகளின் தற்போதைய நிலைமையை முன்வைத்து ஏன் காஷ்மீர் பைல்ஸ் போல இன்னொரு திரைப்படம் எடுக்கக் கூடாது என்று சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதனால் ஜம்மு காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை புரமோட் செய்தவர்கள் இப்போது ஜம்மு காஷ்மீர் நிலைமையை முன்வைத்து காஷ்மீர் ஃபைல்ஸ்2 என படம் எடுக்க தயாரா? வரலாறு மறைக்கப்பட்டுவிடக் கூடாது எனில் இந்த வரலாற்றையும் மறைக்கக் கூடாதுதானே. இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.
முன்னதாக மகாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, காஷ்மீர் பண்டிட்டுகளை நாம் கைவிட்டுவிடக் கூடாது. நாம் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு ஆதரவாகவே நிற்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications