ஷிண்டே சிவசேனா முதுகில் குத்திய பாஜக- ராஜ்தாக்கரே மகனுக்கு ஆதரவு அறிவிப்பால் கடும் குழப்பம்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் புதிய திருப்பமாக மாகிம் தொகுதியில் கூட்டணி கட்சியான முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா வேட்பாளருக்கு ஆதரவு தர பாஜக மறுத்துவிட்டது. மாகிம் தொகுதியில் போட்டியிடும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே மகன் தாக்கரேவுக்கு ஆதரவு தருவதாக பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் ஷிண்டே சிவசேனா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்துள்ளது. மகாராஷ்டிராவில் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி ஆகியவை இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேநேரத்தில் இரு கூட்டணிகளிலும் பல்வேறு குழப்பங்கள் நீடித்து கொண்டுதான் இருக்கின்றன.
மாகிம் சட்டசபை தொகுதி, பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்டது. அத்தொகுதியில் ஷிண்டே சிவசேனா வேட்பாளராக சதா சர்வாங்கர் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. சதா சர்வாங்கர். இதே தொகுதியில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி வேட்பாளராக மகேஷ் சாவந்த் போட்டியிடுகிறார். மேலும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே தமது கட்சியின் வேட்பாளராக மகன் அமித் தாக்கரேவை நிறுத்தியுள்ளார். இதனால் மாகிம் தொகுதியில் கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்தது. ஆனால் தற்போதைய சட்டசபை தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணியில் இடம் பெறவில்லை; தனித்தே போட்டியிடுகிறது.
இந்த நிலையில் புதிய திருப்பமாக, ராஜ்தாக்கரே மகன் அமித் தாக்கரேவை ஆதரிப்பதாக பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். மேலும், இந்த தொகுதி ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்குதான் ஒதுக்கப்பட்டுள்ளது; ஷிண்டே சிவசேனா கட்சியினர் போட்டியிட்டாக வேண்டும் என்று விரும்புகின்றனர். அதனால் அந்த தொகுதியை ஒதுக்கினோம். அதேநேரத்தில் ராஜ்தாக்கரே மகனை ஆதரிக்கிறோம் எனவும் தெரிவித்துவிட்டோம். இதில் ஷிண்டே சிவசேனாவுக்கு எந்த வருத்தமும் இல்லை என தெரிவித்திருக்கிறார். ஆனால் ஷிண்டே சிவசேனாவினரோ, கூட்டணியில் இருந்தும் முதுகில் குத்திவிட்டதே பாஜக என குமுறுகின்றனராம்.
இது தொடர்பாக ஷிண்டே சிவசேனா வேட்பாளர் சதாந்த் சர்வாங்கர் கூறுகையில், 40 ஆண்டுகாலம் சிவசேனா தொண்டனாக இருக்கிறேன். என்னுடைய கடினமான முயற்சியால் 3 முறை எம்.எல்.ஏ.வாகி இருக்கிறேன். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தமது உறவினர்களுக்காக மாகிம் தொகுதியை கேட்டிருக்கமாட்டார். இத்தனைக்கும் பால்தாக்கரேவின் குடும்பத்தினர் இந்த தொகுதியில் இருந்த போதும் என்னையே வேட்பாளராக நிறுத்தினார். என்னை போன்ற ஒரு சாதாரண தொண்டனுக்கு பால்தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்தாக்கரே அநீதி இழைத்துவிடக் கூடாது என்றார். ஆனாலும் ராஜ்தாக்கரே மற்றும் பாஜக தரப்பு சிட்டிங் எம்.எல்.ஏ. சதாந்த் சர்வாங்கரை போட்டியில் இருந்து விலகியாக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications