அறிகுறி இல்லை.. கொரோனாவால் திடீர் மூச்சு திணறல்.. டாக்டர்கள் வரும் முன்பே பலியான மும்பை துணை கமிஷனர்
மும்பை: மும்பை மாநகராட்சி சிறப்பு திட்டங்களுக்கான துணை கமிஷனர் சிரிஷ் தீக்ஷித், கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே மிக அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதிலும், அந்த மாநில தலைநகரான மும்பை கொரோனாவின், பிடியில் சிக்கி உள்ளது என்றே கூறலாம். மருத்துவர்கள், காவல்துறையினர் என முன் களப்பணியாளர்கள் பலரும், கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மிகப்பெரிய ஷாக்கிங் செய்தியாக அந்த மாநகரத்தின் துணை கமிஷனர் சிரிஷ் தீக்ஷித் உயிரிழந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.

ஆரோக்கியம் பற்றிய நம்பிக்கை
இத்தனைக்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான எந்த அறிகுறியும் இவருக்கு கிடையாது. பொதுவாக இவ்வாறு அறிகுறி இல்லாவிட்டால், அந்த நபர் நல்ல ஆரோக்கியமான நபர். எனவேதான் அறிகுறி வெளியே தெரியவில்லை சிகிச்சையின் மூலம் எளிதில் காப்பாற்றி விடலாம் என்ற கருத்து உள்ளது. ஆனால், வெறும் மூன்று நாட்களில், சிரிஷ் தீக்ஷித், கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளார்.

3 நாட்கள் முன்பு கொரோனா பரிசோதனை
மூன்று நாட்களுக்கு முன்பாக இவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டதோடு, அவரது குடும்பத்தினர் மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநகராட்சி அலுவலகத்தில் சிரீஷுடன், பணியாற்றிய சிலருக்கு வைரஸ் பாதிப்பு இருந்ததால், அறிகுறிகள் இல்லாவிட்டாலும் சிரிஷ், தானாகவே, முன்சென்று பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். அந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன.

வீட்டிலேயே தனிமை
அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு உட்படலாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் நோய் அறிகுறியே இல்லை. எனவே நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். வீட்டில் இருந்தே சிகிச்சை பெறுகிறேன், என்று கூறிய சிரிஷ் தீக்ஷித் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

திடீர் மூச்சு திணறல்
ஆனால் இன்று காலை திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள், மருத்துவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். மருத்துவக் குழு, சிரிஷ் தீக்ஷித் வீட்டுக்கு செல்வதற்கு முன்பாக அவர் பரிதாபமாக பலியாகி விட்டார். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறிகுறியே இல்லை
மும்பை மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியாவது இது முதல் முறை அல்ல. சுமார் 55 ஊழியர்கள் இதற்கு முன்பாக பலியாகியுள்ளனர். ஆனால் அறிகுறி இல்லாமல் ஆரோக்கியமாக இருந்த ஒருவர் திடீரென பலியான சம்பவம், கொரோனா நோய் பாதிப்பின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். முன்னதாக, வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மாநகராட்சி ஊழியர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications