பாஜக விட்டு வைக்காது.. செந்தில் பாலாஜி வீட்டு ரெய்டு பற்றி சஞ்சய் ராவத் கமெண்ட்
மும்பை: பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை?" என மகாராஷ்டிரா எம்பி சஞ்சய் ராவத் கேள்வியெழுப்பியுள்ளார். தங்கள் ஆட்சிக்கோ, கட்சிக்கோ யாராவது குறுக்கே நின்றால் அவர்களை பாஜக விட்டு வைக்காது என்றும் சஞ்சய் ராவத் கருத்து கூறியுள்ளார்.
நேற்று காலை அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடத்தினர். சுமார் 17 மணி நேரம் நடைபெற்ற இந்த ரெய்டு இன்று அதிகாலையில் முடிவடைந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை காரில் அழைத்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.

அவர் நெஞ்சுவலியில் கதற, அதிகாரிகள் உடனடியாக அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் ரெய்டின் முடிவில் செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறையினர் முயன்றார்களா? என்று கேள்வியெழுந்தது. ஆனால் இதற்கு அதிகாரிகள் விளக்கமளிக்கவில்லை. இந்நிலையில், உடனடியாக அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.
இந்த விவகாரம் பெரியதாக வெடித்த நிலையில், "விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து - மனிதநேயமற்ற முறையில் பாஜக.,வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது?" என அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கும், பாஜகவுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தேசிய அளவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மமதா பானர்ஜி என பலரும் அமலாக்கத்துறையின் ரெய்டு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பியிருந்தன.
அதாவது, பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கே சந்திரசேகர் ராவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பீகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா, என்சிபி தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தன.
இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ரெய்டு நடவடிக்கை குறித்து மகாராஷ்டிராவின் சிவசேனா (உத்தவ் பிரிவு) எம்பியான சஞ்சய் ராவத் கேள்வியெழுப்பியுள்ளார். "மகாராஷ்டிராவில் உள்ள பாஜக அமைச்சர்கள் 3 பேர் மீது பண மோசடி தொடர்பாக ஆதாரங்களுடன் புகார்களை அனுப்பியுள்ளோம். இவர்கள் மீதான விசாரணை எப்போது தொடங்கும்?
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுத்த அளவில் அமலாக்கத்துறை அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். தங்கள் ஆட்சிக்கோ, கட்சிக்கோ யாராவது குறுக்கே நின்றால் அவர்களை பாஜக விட்டு வைக்காது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications