டெல்லி குண்டுவெடிப்பிலும் ஒரே நாளில் 3 ஆடை அணிந்தவர்.. காலமான மாஜி மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் யார்?
மும்பை: முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மகாராஷ்டிராவில் இன்று காலமானார். அவருக்கு வயது 90. வயது முதிர்வு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. இந்த சிவராஜ் பாட்டீல் ஆடை சர்ச்சையில் சிக்கியவர். டெல்லியில் குண்டு வெடித்து 22 பேர் பலியான நாளில் கூட 3 வகையான ஆடைகளை அணிந்திருந்தார். இதுபற்றி கேட்டதற்கு, ‛‛என்னை விமர்சனம் செய்யுங்கள். என் ஆடை பற்றி பேசாதீர்கள்'' என்று கூறி மீண்டும் சர்ச்சையைில் சிக்கினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சிவராஜ் பாட்டீல். மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரை சேர்ந்தவர். லத்தூர் லோக்சபா தொகுதியில் ஏழு முறை வெற்றி பெற்றார். கடந்த 1991 முதல் 1996 வரை லோக்சபாவின் சபாநாயகராக செயல்பட்டார்.
இவர் கடந்த 2004 முதல் 2008 வரை மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். 2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதலை அடுத்து, உள்துறை அமைச்சர் பதவியை சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்தார். மேலும் பஞ்சாப் ஆளுநராகவும் செயல்பட்டார்.
இவருக்கு வயது 90. இந்நிலையில் தான் வயது முதிர்வு காரணமாக அவர் இன்று காலமானார். சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது மரணமடைந்துள்ள சிவராஜ் பாட்டீல் தான் அணியும் ஆடைகளால் அதிகமாக கவனம் பெற்றவர்.
குறிப்பாக டெல்லியில் குண்டு வெடிப்பு நடந்து 22 பேர் பலியானபோதும் கூட 3 வெவ்வேறு ஆடைகளை அவர் அணிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது கடந்த 2008 ம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று டெல்லியில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 22 பேர் பலியாகினர். 90க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
அப்போது சம்பவ இடத்துக்கு சிவராஜ் பாட்டீல் சென்றார். மத்திய உள்துறை அமைச்சர் என்பதால் அவர் ஸ்பாட்டுக்கு சென்றார். அன்றைய தினம் மட்டும் அவர் 3 வெவ்வேறு உடைகளில் காணப்பட்டார்.
நாட்டின் தலைநகரில் குண்டுவெடித்து 22 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் மத்திய உள்துறை அமைச்சராக அதுபற்றிய எந்த கவலையும் இன்றி 3 வெவ்வேறு ஆடைகளை அணிந்து உள்ளார் என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அப்போது டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் சர்ச்சை பற்றி விளக்கமளித்தார்.
அப்போது, ‛‛நான் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வாழ்பவன். என்னை பற்றி விமர்சனம் செய்யுங்கள். என் ஆடைகளை பற்றி பேசாதீர்கள். இந்த சம்பவங்களின்போது நான் கோபப்படாமல் அமைதியாக இருப்பதால் நீங்கள் குறை காண்கிறீர்கள். இத்தகைய விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டுமா?. இதனை மக்களின் தீர்ப்புக்கு இதை விடுகிறேன். இது அரசியல்வாதியை விமர்சிக்க சரியான முறையா?" என்று கூறினார்.
அப்போது பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த ராஜீவ் பிரதாப் ரூடி, "உள்துறை அமைச்சரின் உடையலங்காரம் குறித்தோ, அவரது வீட்டு அலமாரி குறித்தோ எங்களுக்கு கவலையில்லை. தொடரும் இந்தக் குழப்பங்களுக்கு யார் பொறுப்பு என்பதை அறிய விரும்புகிறோம். அவர் எப்போது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அணியலாம்" என்று கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி ராஜா "நான் இதில் (பாட்டீலின் ஆடைகள்) நுழைய விரும்பவில்லை. ஆனால் உள்நாட்டுப் பாதுகாப்பில் உள்துறை அமைச்சகம் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது" என்றார்.
உள்துறை இணை அமைச்சர் ஷகீல் அஹமது, ‛‛ஒவ்வொருவருக்கும் கண்ணியமாக உடையணியும் உரிமை உண்டு. அமைச்சர் ஒருவரை அவரது கொள்கைத் திட்டங்கள், அர்ப்பணிப்பு, கட்சி நம்பிக்கைக்கு அவர் உண்மையுள்ளவரா என்பதைக்கொண்டே மதிப்பிட வேண்டும். இது தேவையற்ற சர்ச்சையாகும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications