TCS Layoffs: 365 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய TCS..பிரசவ விடுப்பில் இருந்த பெண்களுக்கு போன ஷாக்..
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனம் திடீரென்று 365 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக பிரசவ விடுப்பில் உள்ள பெண்களுக்கு பணியை இருந்து தூக்கி உள்ளது. இதனால் கோபமான ஊழியர்கள் தொழிலாளர் ஆணையரிடம் புகார் செய்துள்ளனர்.
அமெரிக்கா உள்பட நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை குறைத்து வருகிறது. ஏஐ பயன்பாடு, நிறுவனத்தின் மறு கட்டமைப்பு, நிதி செலவினத்தை குறைத்தல் என பல்வேறு காரணங்களை கூறி ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.

ஊழியர்களின் பணி நீக்க நடவடிக்கையை மைக்ரோசாப்ட், காக்னிசண்ட், மெட்டா உள்பட பல நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்தது தான் டிசிஎஸ். டாடா குழுமத்தை சேர்ந்த டாடா கன்சல்சடன்சி சர்வீசஸ் எனும் டிசிஎஸ் நிறுவனம் சமீபகாலமாக நம் நாட்டிலும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது புனேவில் இயங்கி வரும் டிசிஎஸ் நிறுவனம் கடந்த சில நாட்களில் மட்டும் 365 ஊழியர்கள் பணி நீக்கம் செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு 1,000க்கும் அதிகமான ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 365 பேரின் பணி பறிக்கப்பட்டுள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று நீக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதுபற்றி ஊழியர்கள், டிசிஎஸ் நிறுவனம் முறையான பணி நீக்க நடைமுறையை பின்பற்றவில்லை. போதுமான அளவுக்கு இழப்பீடு செய்யவில்லை. பெண் ஊழியர்கள் சிலர் பிரசவ விடுப்பில் இருந்தனர். அவர்களை ராஜினாமா செய்யும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டங்களை மீறி டிசிஎஸ் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில் தான் பணி நீக்கத்தை எதிர்கொண்ட ஊழியர்களில் பலரும் அங்குள்ள தொழிலாளர் ஆணையத்தை அணுகி உள்ளனர். டிசிஎஸ் நிறுவனத்துக்கு எதிராக அவர்கள் புகார் அளித்துள்ளனர். தங்களை மீண்டும் பணிக்கு சேர்க்க வேண்டும் என சிலரும், சிலர் விதிகளின்படி பணி நீக்க ஊதியத்தை டிசிஎஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்று தர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதன்மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் டிசிஎஸ் நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர் ஆணையத்தில் புகார் செய்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே மகாராஷ்டிரா தொழிலாளர் ஆணையத்தில் புகார் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் தொழிலாளர் ஆணையம் சார்பில் டிசிஎஸ்ஸின் எச்ஆர் பிரிவு தலைவருக்கு நோட்டீஸ் வழங்கி விவரம் கேட்கப்பட்டது. அதற்கு டிசிஎஸ் எச்ஆர் தலைமை எழுத்துப்பூர்வமாக பதிலளிப்பதாக தெரிவித்துள்ளது.
ஐடி துறை என்றால் கைநிறைய சம்பளம், ஒரு நிறுவனம் இல்லாவிட்டால் இன்னொரு நிறுவனம் என்று நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. குறிப்பாக டிசிஎஸ் ஐடி நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து அடிக்கடி விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications