வாடகைக்கு வீடு தேடும் பெண்களே உஷார்.. இப்படியும் வருகிறது பாலியல் தொல்லை.. அதிர வைத்த சம்பவம்
மும்பை: மும்பையில் வாடகை வீடு வேண்டுமென பேஸ்புக்கில் பதிவிட்ட ஐ.டி. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் இணங்க மறுத்ததால் தன்னை பற்றி அவதூறாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் வேதனை அடைந்துள்ளார்.

மும்பையில் பிரதான ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் 27 வயதான பெண் ஊழியர் கடந்த ஊரடங்கின்போது குஜராத் மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். தற்போது கொரோனா அச்சம் குறைந்து ஐ.டி. நிறுவன பணியாளர்கள் நேரில் வந்து பணிபுரிய தொடங்கி உள்ளனர்.
உயர்ந்த கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருந்தாலும் இதுநாள் வரை பேஸ்புக் கணக்கு இல்லாத அந்த பெண் வீடு வாடகைக்கு தேடுவதற்காக புதியதொரு கணக்கை தொடங்கி உள்ளார். பேஸ்புக்கில் ரியல் எஸ்டேட் தொடர்பான பேஸ்புக் பக்கங்களுக்கு சென்று தனக்கு கோரேகான் பகுதியில் வீடு ஒன்று வாடகைக்கு வேண்டும் என பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்து பலர் அவரை தொடர்புகொண்டு விவரங்களை சொல்லி வந்தனர்.
இந்நிலையில் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அக்ஷய் சிங் என்பவர் எந்த மாதிரியான வீடு வேண்டும், என்ன பட்ஜெட் போன்ற விவரங்களை கேட்டறிந்துள்ளார். பின்னர் இதே பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு இருப்பதாக அந்த வீட்டின் வீடியோவை அந்த பெண்ணுக்கு அனுப்பி உள்ளார். பின்னர் மீண்டும் மீண்டும் எந்த மாதிரியான வீடுகள் வேண்டும் என்று தரகர் போலவே கேட்டுள்ளார்.
மேலும் தனியாக வீடு வேண்டுமா அல்லது பிறருடன் ஷேர் செய்து கொள்வது போல் வீடு வேண்டுமா என்றெல்லாம் கேட்டுவிட்டு கடைசியாக அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிவிட்டார். மேலும் அந்தப் பெண் எங்கு பணிபுரிகிறார், சொந்த ஊர் எது, என்ன பணி என்ற விவரங்களை செல்போனில் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
நன்றாக பேசிக்கொண்டிருந்த அக்ஷய் சிங் திடிரென அந்த பெண்ணிடம் தவறான முறையில் பேச ஆரம்பித்தார். அந்தப் பெண்ணிடம் வீட்டிற்கு வாடகை எதுவும் தரவேண்டாம், தனக்கு தேவைப்படும்போது பாலியல் ரீதியாக சம்மதித்தால் போதும் என்று கூறினார்.
இதை கேட்டு அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். அதுமட்டுமின்றி அந்த பெண் வசிப்பதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். இந்த விஷயத்தை வெளியில் சொன்னாலோ அல்லது இணங்க மறுத்தாலோ பேஸ்புக்கில் போலி முகவரி தொடங்கி விலைமாதர் என்று பதிவிடுவேன் என அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். நன்றாக பேசிய அக்ஷய் அடுக்கடுக்காக இப்படி பேசவே அதிர்ந்து போன பெண் பேஸ்புக்கில் அவரை பிளாக் செய்துவிட்டார்.
ஆனாலும் அவரது செல்போனுக்க மெசேஜ் அனுப்பி தொல்லை தந்துள்ளார் அக்ஷய் சிங். இறுதியில் வேறு வழியின்றி அந்த நபரைப் பற்றி மும்பை காவல்துறையின் டிவிட்டர் பக்கத்தில் புகார் அளித்தார். ஆனால் அவருக்கு சொந்த ஊர் குஜராத் என்பதால் அங்கிருக்கும் காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு பதில் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் செய்தி இணையதளத்திற்கு தெரிவித்துள்ள அந்தப் பெண் அந்த நபர் அவருடைய பேஸ்புக் விவரங்களை மாற்றிவிட்டதாக தெரிவித்தார். ஆனாலும் போலீஸ் மீது நம்பிக்கை இருப்பதாகவும் விரைவில் அந்த நபர் பிடிபடுவார் எனவும் அந்தப் பெண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications