'தி கேரளா ஸ்டோரி' படத்தின் தயாரிப்பாளரை பப்ளிக்காக தூக்கில் போடனும்.. தேசியவாத காங். கொதிப்பு
மும்பை: தி கேரளா ஸ்டோரி' படத்தின் தயாரிப்பாளரை பொதுவெளியில் தூக்கில் போட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜிதேந்திர அவாத் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், இந்தி, மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. சுதீப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி உள்ள இப்படத்தில் நடிகைகள் அடா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
கேரளாவில் சில பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போல படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு கடும் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் இந்த படம் திரையிட்ட மறுநாளே முற்றுகை போராட்டம் நடந்ததால் பாதுகாப்பு கருதி படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

எனினும் தி கேரளா ஸ்டோரி திரைப் படத்துக்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா ஆதரவு தெரிவித்து வருகின்றன. மும்பையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை பொதுமக்கள், தொண்டர்கள் இலவசமாக பார்க்க பாஜக தலைவர்கள் டிக்கெட் எடுத்து தருகிறார்கள்.
மும்பையில் பாஜக அமைச்சர்கள் மங்கல் பிரதாப் லோதா, அதுல் பத்கால்கர், எம்.எல்.ஏ.க்கள் சுனில் ரானே, பரக் ஷா ஆகியோர் தொண்டர்கள் இலவசமாக படம் பார்க்க ஏற்பாடு செய்தனர். இதன் காரணமாக 'தி கேரளா ஸ்டோரி' படம் மும்பையில் வசூல் சிறப்பாக இருக்கிறது.
இந்தநிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த படத்தின் தயாரிப்பாளரை பொது வெளியில் தூக்கில் போட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜிதேந்திர அவாத் ஆவேசமாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் "அவர்கள் கேரளாவின் பெயரை மட்டும் கெடுக்கவில்லை, அந்த மாநிலத்தின் பெண்களை அவமதித்து உள்ளனர். அவர்கள் 32 ஆயிரம் கேரள பெண்கள் மாயமாகி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக சொல்கின்றனர். ஆனால் உண்மையில் சேர்ந்தவர்கள் 3 பேர் தான். அந்த படத்தின் தயாரிப்பாளரை பொதுவெளியில் தூக்கில் போட வேண்டும்" என்றார்.
இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அந்த மனுவில், திரைப்படத்திற்கு மத்திய சான்றளிப்பு வாரியம் சான்றளித்த பிறகு தடை விதிக்க மாநில அரசுக்கு (மேற்கு வங்க அரசு) அதிகாரம் இல்லை. திரைப்படத்துக்கான தடையை விதிக்க சட்டம் ஒழுங்கை மாநில அரசு காரணமாக காட்ட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தியேட்டர் உரிமையாளர்களுக்கு விடுத்த எச்சரிக்கை காரணமாக, திரைப்படம் திரையிடப்படாமல் மறைமுக தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications