மகாராஷ்டிரா: நள்ளிரவு வரை நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு... விடிகாலையில் இப்படி ஒரு படார் பல்டி
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் யாரும் எதிர்பாராத பெரும் திருப்பமாக பாஜக- தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சிகள் இணைந்து புதிய அரசை அமைத்துள்ளன. முதல்வராக மீண்டும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும் துணை முதல்வராக என்சிபியின் அஜித்பவாரும் பதவி ஏற்றுள்ளனர்.
மகாராஷ்டிராவில் 105 இடங்களைக் கைப்பற்றிய பாஜகவும் 56 இடங்களைப் பெற்ற சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் சமமான அதிகாரப் பகிர்வு கோரிக்கையை சிவசேனா முன்வைத்தது.
இதனால் அதிருப்தி அடைந்த பாஜக, ஆட்சி அமைக்க முடியாது என ஆளுநர் கோஷ்யாரி விடுத்த அழைப்பை நிராகரித்தது. இதனையடுத்து சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க பல கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தின.

டெல்லியில் பேச்சுவார்த்தை
இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் டெல்லியிலும் மும்பையிலும் என்சிபி-சிவசேனா- காங்கிரஸ் கட்சிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தின.

உத்தவ் தாக்கரே முதல்வர்
இப்பேச்சுவார்த்தைகள் ஒருவழியாக நேற்று இரவு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. என்சிபி-காங்கிரஸ்-சிவசேனா தலைவர்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் அடுத்த அரசு அமையும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியிருந்தார்.

பெருமகிழ்ச்சியில் சிவசேனா
இதுதான் ஊடகங்களின் தலைப்புச் செய்தியானது. உத்தவ் தாக்கரேவும் இது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். அதுவும் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவின் உத்தவ் தாக்கரேதான் முதல்வர் என்று பெருமகிழ்ச்சியில் அக்கட்சி இருந்தது.

கோஷ்யாரி பயணம் ரத்து
மேலும் ஆளுநர் கோஷ்யாரி தமது டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் என்சிபி-காங்கிரஸ்- சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரக் கூடும் என்பதால் அவர் மும்பையில் இருக்கிறார் என்றும்தான் விடிகாலை வரை செய்திகள். ஆனால் இன்றைய பொழுது விடிந்ததுதான் தாமதம்... ஒட்டுமொத்த களநிலவரமும் தலைகீழாக மாறிப் போனது.

பயங்கர திருப்பம்
திடீரென பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். அத்துடன் என்சிபியின் அஜித் பவார் துணை முதல்வராகிவிட்டார். தற்போது பாஜக-என்சிபி அரசுக்கு 159 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளன.

எப்ப நடந்தது இது?
பாஜகவுடன் கைகோர்க்கும் முடிவை என்சிபி எப்போது எடுத்தது? இந்த முடிவை எடுக்கும் அதிகாரம் அஜித் பவாருக்கு தரப்பட்டதா? இது சரத் பவாருக்கு தெரிந்தே எடுக்கப்பட்ட முடிவா? அல்லது என்சிபி பிளவுபட்டுள்ளதா? டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்க சென்ற சரத்பவார் திடீரென பிரதமர் மோடியுடன் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியது இதற்குதானா? என ஏகப்பட்ட வியப்புகளுடனும் கேள்விகளுடன் விடிகாலையை எதிர்கொண்டிருக்கிறது மகாராஷ்டிரா அரசியல் களம்.












Click it and Unblock the Notifications