வானில் பறந்த "திமிங்கலம்.." மும்பை ஏர்போர்ட்டில் கம்பீரமாக இறங்கிய மெகா விமானம்.. வாயை பிளந்த மக்கள்
மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் பலரையும் அப்படியே வியக்க வைத்து விட்டது.
இந்தியா விமான துறையில் கடந்த சில ஆண்டுகளாகவே மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பயணிகள் விமானம் மட்டுமின்றி, சரக்கு விமான போக்குவரத்தும் கூட சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் இந்தியா விமான நிலையங்களும் முக்கிய இடங்களில் இருக்கவே செய்கிறது. இதனால் உலக நாடுகளின் பார்வையும் இந்தியா பக்கம் திரும்பி உள்ளது.

பெலுகா விமானம்
இந்தியாவில் மிக முக்கியமான ஏர்போர்ட்களில் ஒன்றாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு நடந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சூப்பர் டிரான்ஸ்போர்ட்டரான ஏர்பஸ் பெலுகா விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் அந்த விமானம் உடனடியாகவே அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பயணிகளின் கவனத்தை ஈர்த்தது.

ஏர்பஸ்
ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ300-600 எஸ்டி சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் என்றும் இந்த விமானம் அழைக்கப்படுகிறது. பொதுவாக மிகப் பெரிய விமான சரக்குகள் இந்த ஏர்பஸ் பெலுகா மூலமே எடுத்துச் செல்லப்படும். பொதுவாக ஏர்பஸ் நிறுவனங்களில் விமானங்களை மற்ற நிறுவனங்கள் தான் இயக்கும் ஆனால், இந்த மிக பெரிய பெலுகாவை ஏர்பஸ் நிறுவனமே இயக்குகிறது. 1990கள் முதலே பெரிய சரக்குகளை மற்றொரு நாட்டிற்கு எடுத்துச் செல்ல இந்த விமானங்களையே ஏர்பஸ் பயன்படுத்தி வருகிறது.

மும்பை ஏர்போர்ட்
இப்போது ஏர்பஸ் நிறுவனத்திடம் புதிதாக ஆறு பெலுகா எக்ஸ்எல் விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து மும்பை ஏர்போர்ட், இதைப் பார்த்து பயணிகள் வியந்துவிட்டதாகவும் ட்வீட் செய்து உள்ளது. இது தொடர்பாக அவர்கள் தங்கள் ட்விட்டரில், "மும்பை ஏர்போர்ட்டில் வந்திறங்கிய விமானத்தைப் பாருங்கள்! ஏர்பஸ் பெலுகா சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் மும்பை விமான நிலையத்தில் முதல் முறையாகத் தரையிறங்கி அனைவரையும் வியக்க வைத்தது" என்று பதிவிட்டுள்ளது.

திமிங்கலம்
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானங்களில் இதுவும் ஒன்றாகும்.. இதன் முகப்பு பார்க்க பெலுகா திமிங்கலம் போலவே இருக்கும். இதன் காரணமாகவே இந்த விமானம் பெலுகா என்று அழைக்கப்படுகிறது. விண்வெளி, எனர்ஜி, ராணுவம், கடல்சார் துறைகளில் பெரிய சரக்குகளை எடுத்துச் செல்ல வேண்டிய சூழல் இருக்கும் நிலையில், அதற்கு இந்த விமானம் தீர்வாக உள்ளது. இந்த விமானம் 56 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்டது என ஏர்பஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

வியந்துபோன பயணிகள்
முன்னதாக மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் முன்பு, இந்த விமானம் கடந்த வாரம் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது. இது தரையிறங்கும் போதும் சரி, பறக்கும் போதும் சரி பொதுமக்கள் அப்படியே வியந்து போய் இந்த விமானத்தைப் பார்த்து ரசிக்கிறார்கள். இந்த திமிங்கல விமானம், எரிபொருள் நிரப்புவதற்கும், பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்கும் நள்ளிரவு 12.30 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தை வந்தடைந்தது.

நெக்ஸ்ட் தாய்லாந்து
இந்திய மிகப் பெரிய விமானம் உலகில் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றிக் கொண்டே இருக்கும். இதன் அளவு காரணமாக இந்த விமானத்தால் அனைத்து விமான நிலையங்களிலும் தரையிறங்க முடியாது. பெரிய ஓடுபாதை இருக்கும் ஏர்பர்டுகளில் மட்டுமே இதனால் தரையிறங்க முடியும். இருப்பினும், இந்தியாவுக்கு இந்த விமானம் அடிக்கடி வராது என்பதாலேயே பலருக்கும் இந்த விமானத்தின் மீது கவனம் விழுந்து உள்ளது. மும்பையில் இருந்து அந்த விமானம் அன்றைய தினமே தாய்லாந்தை நோக்கிப் புறப்பட்டதாக மும்பை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரியது
இப்போது உலகில் உள்ள மிக பெரிய விமானமாக இந்த ஏர்பஸ் பெலுகா தான் உள்ளது. சுமார் 23 ஆயிரம் லிட்டர் எரிபொருளுடன் இந்த விமானத்தால் பறக்க முடியும். மேலும் அதிகபட்சமாக இந்த விமானத்தால் 155,000 கிலோ வரை எடையை தூக்கிச் செல்ல முடியும். அதேபோல பயணிகள் விமானத்தில் ஏர்பஸின் ஏ 380 தான் மிகப் பெரியது. இரட்டை அடுக்கு ஏர்பஸ் ஏ 380 விமானத்தில் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் பயணிக்க முடியும்.

உடைத்தெறியப்பட்ட மிரியா
ஆனால், சோவியத் யூனியன் இதை விட பெரிய விமானம் ஒன்றைத் தயாரித்து இருந்தது.AN-225 'Mriya' என்ற அந்த விமானம் 1985ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 30 சக்கரங்கள், 6 இன்ஜின்கள், 290 அடி இறக்கைகளுடன் தயாரிக்கப்பட்ட இது தான் உலகிலேயே மிக பெரியது. இந்த விமானத்தால் சரக்கை ஏற்றிக் கொண்டு 4,500 கிமீ வரை செல்ல முடியும். இருப்பினும், உக்ரைன் போரில் இந்த விமானத்தைச் சுக்கு நூறாக ரஷ்யா உடைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications