மகாராஷ்டிராவில் உங்களுக்கு பிடித்த முதல்வர் முகம் யார்? பாஜக, காங்கிரசுக்கு ட்விஸ்ட் தந்த ஷிண்டே
மும்பை: மகாராஷ்டிராவில் உங்களுக்கு பிடித்த முதல்வர் முகம் யார் என்பது குறித்து மேட்ரிஸ் நியூஸ் கம்யூனிகேசன் நிறுவனத்துடன் இணைந்து டைம்ஸ் நவ் செய்தி ஊடகம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது. இந்த கணிப்பில் ஏக்நாத் ஷிண்டே 27% சதவீத வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அடுத்தபடியாக உத்தவ் தாக்கரே 23 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். தேவேந்திர ஃபட்னாவிஸ் 21% வாக்குகளுடன் 3வது இடத்தில் உள்ளதாக கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 145 இடங்கள் ஆகும். அப்போதைய தேர்தலின் போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை பிளவுபடாமல் தேர்தலை சந்தித்தன. இதில் அதிகபட்சமாக பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும். காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும், மஜ்லிஸ் கட்சி 2 இடங்களிலும், எம்என்எஸ் கட்சி ஒரு இடங்களிலும் வென்றன.

இதில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் தேர்தலுக்கு பின்னர் பிரிந்தன. யாரும் எதிர்பாராதவிதமாக சிவசனோ தலைவர் உத்தவ் தாக்கரே, பாஜகவிற்கு பதில் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தார். உத்தவ் தாக்கரே முதல்வரானார். இந்த ஆட்சி சில ஆண்டுகள் ஓடிய நிலையில், திடீரென ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா இரண்டாக உடைந்தது. இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கி புதிய கூட்டணி ஆட்சியை பாஜக அமைத்தது.
சிவசேனாவைத் தொடர்ந்து மீண்டும் அஜித்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உடைந்தது. அஜித் பவார் தேசியவாத காங்கிரசும் பாஜக கூட்டணி ஆட்சியில் இணைந்தது. இப்படியான அரசியல் குழப்பங்கள் நடந்து வந்த மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 13 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 9 இடங்களிலும் வென்றன.
சரத்பவார் தலைலமையிலான தேசியவாத காங்கிரஸ் 8 இடங்களிலும், ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 1 இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வென்றது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்தியா கூட்டணி 30 இடங்களிலும், பாஜக கூட்டணி 17 இடங்களிலும் மகாராஷ்டிராவில் வென்றுள்ளன.
இந்த சூழலில் மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெற போகிறது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவோம் என்று இந்தியா கூட்டணி உற்சாகமாக உள்ளது. இந்த சூழலில், மகாராஷ்டிராவில் உங்களுக்கு பிடித்த முதல்வர் முகம் யார் என்பது குறித்து மேட்ரிஸ் நியூஸ் கம்யூனிகேசன் நிறுவனத்துடன் இணைந்து டைம்ஸ் நவ் செய்தி ஊடகம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.
உங்களுக்கு பிடித்த முதல்வர் முகம் யார் என்பது குறித்த இந்த கருத்துக்கணிப்பு முடிவில், ஏக்நாத் ஷிண்டே 27% சதவீத வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அடுத்தபடியாக உத்தவ் தாக்கரே 23 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் 21% வாக்குகளுடன் 3வது இடத்தில் உள்ளதாகவும், மற்றவர்கள் 20 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளதாகவும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications