ராஜ் தாக்ரேவுடன் கூட்டணியா.. உத்தவ் சிவசேனா கட்சி கொடுத்த ரியாக்ஷன்.. 20 ஆண்டு கால மோதல் முடிகிறதா?
மும்பை: மகாராஷ்டிராவில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த உத்தவ் தாக்கரே- ராஜ் தாக்கரே இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக பேசியது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், இன்னும் இருகட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்படவில்லை என்றார்.
மகாராஷ்டிராவில் பால்தாக்கரே தொடங்கிய சிவசேனாவில் அவரது மகன் உத்தவ் தாக்கரேவும், சகோதரர் மகன் ராஜ்தாக்கரேவும் முக்கிய பொறுப்பு வகித்தனர். ஆனால் நாளடைவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கடந்த 2005 ஆம் ஆண்டு சிவசேனாவில் இருந்து விலகினார். தொடர்ந்து தனிக்கட்சியையும் ராஜ் தாக்கரே தொடங்கினார்.

இந்தி திணிப்பு
நவநிர்மாண் சேனா என்ற பெயரில் கட்சி தொடங்கியிருக்கும் ராஜ் தாக்கரே தனித்து செயல்பட்டு வருகிறார். அப்போது முதல் எதிரும் புதிருமாக இருவரும் அரசியல் செய்து வந்தனர். இந்த நிலையில்தான், சமீபத்திய பின்னடைவுகளால் இருவரும் இணைந்து செயல்படுவோம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. அதாவது, மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 3-வது மொழியாக இந்தி மொழியை கட்டாயமாக கற்க அம்மாநில அரசு உத்தரவிட்டது.
இணைந்து செயல்பட முடிவு
இதற்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்கவே முடியாது என்று சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்ரே ஆகியோர் திட்டவட்டமாக கூறினர். இந்த இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக இருந்த நிலையில் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்ட களத்தில் இணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறும் போது, மகாராஷ்டிராவின் நலன்களுக்காக, எங்களுக்கு இடையேயான மோதல்களை கைவிட்டுவிட்டு ஒருங்கிணைந்து செயல்படப் போகிறோம் என்று கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய உத்தவ் தாக்கரேவும், எங்களிடையேயான சிறு சிறு பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்திய மக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்பட தயார்" என்று கூறினார்.
20 ஆண்டு மோதல் முடிகிறதா?
உத்தவ் மற்றும் ராஜ்தாக்கரே இடையேயான 20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், உத்தவ் சேனா எம்பி சஞ்சய் ராவத் கூட்டணி எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறுகையில், "கூட்டணி எதுவும் இல்லை. வெறுமனே உணர்ச்சிபூர்வமான உரையாடல்கள் மட்டுமே நடைபெற்று வருகிறது" என்றார்.
எனினும், "இருவருக்கும் இடையே கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக மறுக்கவில்லை. ராஜ் தாக்கரேவும் உத்தவ் தாக்கரேவும் சகோதரர்கள், நாங்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக இருந்தோம். எங்களின் உறவு முறியவில்லை. எனவே இரு சகோதரர்களும் முடிவு செய்வார்கள்" என்றும் பேசினார். சஞ்சய் ராவத்தின் இந்த பேச்சு கூட்டணி அமையலாம் என்பதை சூசகமாக காட்டுவதாக மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் ரியாக்ஷன்
இதற்கிடையே, இந்த விவகாரம் பற்றி பாஜக கூறுகையில், ”ராஜ் தாக்கரேவும், உத்தவ் தாக்கரேவும் ஒன்றிணைவதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று கூறியுள்ளது. இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:- ராஜ் தாக்கரேவும், உத்தவும் தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இணைவதில் யாரும் வருத்தப்பட வேண்டியது இல்லை. ஒருவர் அழைத்ததற்கு மற்றொருவர் பதில் கூறியுள்ளார். இதில் நாங்கள் (பாஜக) ஏன் தலையிட வேண்டும். அவர்கள் இணைவதில் மகிழ்ச்சிதான்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications