சன்ரூப்பால் பறிபோன உயிர்.. காரில் பயணித்த பெண் உடல் நசுங்கி பலி.. சாவு எப்படிலாம் வருதுனு பாருங்க
மும்பை: மகாராஷ்டிராவில் சொகுசு காரில் 43 வயது பெண் பயணம் செய்தார். அந்த காரில் சன்ரூப் வசதி உள்ளது. மலைப்பாதையில் சென்றபோது திடீரென்று பாறை உருண்டு சன்ரூப் வழியாக காருக்குள் விழுந்தது. இதில் இருக்கையில் அமர்ந்து பயணித்த அந்த பெண் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். கணவர் - மகன் கண்முன்னே அந்த பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மரணம்.. எப்படி வரும்.. எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. இதனால் தான் ‛புல் தட்டி இறந்தவனும் உண்டு.. புலி கடித்து பிழைத்தவனும் உண்டு' என்று சொல்வார்கள்.

இதன் அர்த்தம் என்னவென்றால் அதிர்ஷ்டம் இருந்தால் பெரிய விபத்தில் சிக்கியவன் கூட உயிர் பிழைப்பான். அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் சிறிய விபத்தில் சிக்கியவர் கூட உயிரை பறிகொடுப்பார் என்பது தான்.
இதற்கிடையே தான் தற்போது மகாராஷ்டிராவில் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. சாலையில் சென்ற சொகுசு காரின் சன்ரூப் வழியாக உள்ளே விழுந்ததில் பெண் ஒருவர் பலியாகி உள்ளார். இந்த பெண் யார்? பின்னணி என்ன? அவர் எப்படி உயிரிழந்தார்? என்பதுபற்றி சோகமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் ஸ்நேஹல் குஜராத்தி(வயது 43). இவர் புனேவில் இருந்து மாங்கான் நகருக்கு காரில் பயணித்தார். வோக்ஸ்வாகன் விர்டஸ் (Volkswagen Virtus) காரில் ஸ்நேஹல் பயணித்தார். கணவர் மற்றும் மகன் உடன் இவர் காரில் பயணித்தார். காரை அவரது கணவர் ஓட்டினார். காரின் முன்பகுதியில் உள்ள இருக்கையில் ஸ்நேஹல் அமர்ந்து பயணம் செய்தார்.
இந்த காரில் சன்ரூப் வசதி உள்ளது. மகாராஷ்டிராவின் தம்ஹினி காட் எனும் மலைப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து பெரிய பாறை ஒன்று உருண்டு வந்தது. அந்த பாறை கண்இமைக்கும் நொடியில் ஸ்நேஹல் பயணித்த காரின் மீது விழுந்தது.
சன்ரூப்பின் மீது விழுந்த பாறை அதனை உடைத்து காருக்குள் விழுந்தது. இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்து பயணித்த ஸ்நேஹல் பாறைக்கு அடியில் சிக்கினார். ஸ்நேஹல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். கணவர், மகன் கண்முன்னே அவரது உயிர் பிரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்து தம்ஹினி காட் என்பது நிலச்சரிவு அபாயம் உள்ள இடமாகம். இதனால் பிற இடங்களில் பாறைகள் உருண்டு வர வாய்ப்புள்ளதா, நிலச்சரிவு அபாயம் உள்ளதா? என்பது பற்றிய ஆய்வுக்கு ராய்காட் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பொதுமக்கள் தேவையின்றி தம்ஹினி காட் மலைப்பாதையில் பயணிக்க வேண்டாம். அத்தியாவசியம் இருந்தால் மட்டுமே அந்த பாதையை பயன்படுத்த வேண்டும். அதற்கும் கூட மாற்று வழியை ஏற்படுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications