மைசூரு அரசு பஸ் ஸ்டாண்டு சுவர் கண்ணாடியில் தென்பட்ட முகம்.. தெறித்து ஓடும் நபர்கள்.. வீடியோ வேற
மைசூரு: மைசூரு நகரின் அரசு விருந்தினர் மாளிகை சுற்றுச்சுவரில் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பவர்களை தடுப்பதற்காக மைசூரு மாநகராட்சி நிர்வாகம் வரிசையாக கண்ணாடிகளைப் பொருத்தியுள்ளது. பஸ் ஸ்டாண்டு எதிரே அமைந்துள்ள இந்த சுவரை அசுத்தம் செய்பவர்களை கட்டுப்படுத்த இந்த வினோதமான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. கண்ணாடியில் தங்களது பிம்பத்தை பார்த்தவுடன் அநாகரீகமாக செயல்படத் தயங்குவார்கள் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு நகரின் பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கில், மைசூரு மாநகராட்சி நிர்வாகம் ஒரு வினோதமான ஆனால் நேரடியான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான அரசு விருந்தினர் மாளிகையின் சுற்றுச்சுவரில் பெரிய அளவிலான கண்ணாடிகளைப் பொருத்தி, அங்கு அசுத்தம் செய்பவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.
மைசூரு அரசு பேருந்து நிலையம்
மைசூரு மாநகரப் பேருந்து நிலையத்திற்கு மிக அருகிலேயே இந்த அரசு விருந்தினர் மாளிகை அமைந்துள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டு நுழைவாயிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ள விருந்தினர் மாளிகையின் நீண்ட காம்பவுண்ட் சுவர், கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்களால் அசுத்தம் செய்யப்பட்டு வந்தது. இந்தப் பாதையைக் கடந்து செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள், அந்தச் சுவரைத் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்தனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வந்தது. இதனைத் தடுக்க மைசூரு மாநகராட்சி பல வழிகளில் முயற்சி செய்தது.
இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள்
ஆரம்பத்தில் அந்த சுவர்களில் 'இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள்' என்ற எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டன. மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இருந்தாலும் மக்களின் இந்த அநாகரீகமான பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. அதன் பிறகு, சுவர்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டன. ஆனால், அந்த ஓவியங்களின் மீதும் மக்கள் அசுத்தம் செய்வதை நிறுத்தவில்லை.
தொடர்ந்து இந்த பகுதி அசுத்தமாவதை தடுக்க முடியாமல் போன நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் ஒரு புதிய யுக்தியை செயல்படுத்த முடிவெடுத்தனர். அதன் வெளிப்பாடாகவே இப்போது அந்தச் சுவரில் ஆள் உயரக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.
பஸ் ஸ்டாண்டு கண்ணாடி - தெறித்து ஓடும் மக்கள்
சுமார் 10 முதல் 12-க்கும் மேற்பட்ட பெரிய கண்ணாடிகள் வரிசையாக அந்தச் சுவரில் சட்டமிடப்பட்டுப் பொருத்தப்பட்டுள்ளன. யாராவது ஒருவர் அசுத்தம் செய்யும் நோக்கத்தில் அந்தச் சுவரை நெருங்கினால், கண்ணாடியில் தெரியும் தங்களது பிம்பத்தைப் பார்த்தவுடன் அவர்கள் கூச்சமடைந்து அங்கிருந்து விலகிச் செல்வார்கள் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இந்த முயற்சி எடுக்கப்பட்ட பிறகு அந்த இடத்தின் தோற்றமே முழுமையாக மாறியுள்ளது. கண்ணாடிகள் பொருத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், அந்தச் சுவரை ஒட்டியுள்ள தரைப்பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
கண்ணாடியில் தென்பட்ட உருவம்
இந்தத் திட்டம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் அசுத்தம் செய்ய சுவரை நோக்கி செல்வதும், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியில் தனது உருவம் தெரிவதைக் கண்டு தயங்கி, உடனே அங்கிருந்து திரும்பிச் செல்வதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் மாநகராட்சியின் இந்த வினோத நடவடிக்கையை ஷேர் செய்து வருகிறார்கள்.. இப்போதைக்கு இந்த ஒரு பகுதியில் மட்டுமே சோதனை முயற்சியாகக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது எந்த அளவிற்கு நீண்ட கால அடிப்படையில் பலன் தருகிறது என்பதை அதிகாரிகள் கவனித்து வருகிறதர்கள்..
சுவர்களில் கடவுள்
சுவர்களில் கடவுள் படங்களை ஒட்டுவது அல்லது ஓவியம் வரைவதை விட, இந்தக் கண்ணாடி முறை ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரங்களைச் சுத்தமாக வைக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மைசூரு மாநகராட்சியின் இந்தத் தனித்துவமான நடவடிக்கை தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அரசு விருந்தினர் மாளிகை போன்ற மிக முக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட்ட இடத்தின் சுவரிலேயே இந்த நிலை நீடித்து வந்த நிலையில், இப்போது கண்ணாடிகள் மூலம் அதற்குத் தீர்வு காண முயன்றுள்ளனர். பொது இடங்களில் அநாகரீகமாக செயல்படும் நபர்களுக்கு இந்த அதிரடியானது, ஒருவித தர்மசங்கடத்தையே தந்து வருகிறதாம்...!!













Click it and Unblock the Notifications