கொட்டும் மழையில் போராட்டம்.. இழப்பீடு தராமல் சிபிசிஎல் ஆலை விரிவாக்கமா? கொதித்தெழுந்த விவசாயிகள்!
நாகை: நாகை மாவட்டம் பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிபிசிஎல் விரிவாக்க பணிக்காக கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து நரிமணம், பனங்குடி உள்ளிட்ட கிராம விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் குரூடாயிலை பெட்ரோல், டீசலாக பிரிக்கும் பணி இங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிபிசிஎல் ஆலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக பனங்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. இதைதொடர்ந்து மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு சட்டத்தின் படி கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.
சிபிசிஎல் எண்ணெய் ஆலை விரிவாக்கத்திற்கு பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட 3 ஊராட்சிகளில் 620 ஏக்கர் நிலம் எடுப்பு பணிகள் நடந்தன. 3 ஊராட்சிகளை சேர்ந்த 570 விவசாயிகளிடம் இருந்து 620 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் சிபிசிஎல் நிறுவன அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ரூ.31,500 கோடி மதிப்பீட்டில் பணிகளை தொடங்கிய நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பனங்குடி பகுதியிலும் மழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையிலும் விவசாயிகள், மத்திய அரசுக்கும், சிபிசிஎல் நிறுவனத்துக்கும் எதிராக கோரிக்கை முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலைக்குள் செல்ல வேண்டிய 10க்கும் மேற்பட்ட லாரிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications