அதிர்வேட்டு முழங்க.. கொடியேற்றத்துடன் தொடங்கியது உலகப் பிரசித்தி பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா!
நாகப்பட்டினம்: உலகப் பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உலக பிரசித்திப் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் நாகூர் ஆண்டவரை வழிபாடு செய்து வருகின்றனர்.

அதிசிறப்பு வாய்ந்த நாகூர் ஆண்டவர் தர்காவில் 467ஆம் ஆண்டு பெரிய கந்தூரி விழாவையொட்டி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இன்று இரவு அதிர்வேட்டுகள் முழக்கத்துடன் 5 மினராக்களில் ஒரே நேரத்தில் புனிதக் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கந்தூரி திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
10 நாள் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று இரவு நடைபெறுகிறது. 24ஆம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் சன்னதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இன்று (டிசம்பர் 14) பகல் 12 மணிக்கு நாகை மீரா பள்ளிவாசலில் முஸ்லிம் ஜமாத்தார்கள் முன்னிலையில் பாத்திஹா ஓதி, பெரிய கண்ணாடி அலங்கார ரதத்தில் புனிதக்கொடி வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நாகூர் தர்காவிற்கு ஊர்வலமாக புறப்பட்டது.
தொடர்ந்து தர்கா அலங்கார மண்டபத்தில் பாத்திஹா ஓதி, அதிர்வேட்டுக்கள் முழங்க ஒரே நேரத்தில் மின்னொளி அலங்காரத்தில் பெரிய மினரா உட்பட 5 மினராக்களில் பெரிய கந்தூரி விழாவிற்கான புனிதக்கொடிகள் இன்று ஏற்றப்பட்டது.
நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகள் நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 45 கிலோ சந்தணக் கட்டைகளை நாகூர் தர்காவுக்கு கட்டணமின்றி வழங்க முதல்வர் ஆணை பிறப்பித்தார்.
நாகூர் கந்தூரி விழாவையொட்டி மாவட்ட எஸ்.பி. ஹர்ஷ் சிங் தலைமையில், ஆயுதப்படை போலீசார், உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications