‛தேர்தல் பணம் பிரிப்பதில் தகராறு’.. பாஜக பிரமுகருக்கு வெட்டு.. திருவாரூர் மாவட்ட தலைவர் மீது வழக்கு
நாகப்பட்டினம்: திருவாரூரில் தேர்தல் பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பாஜக பிரமுகரை ஒரு கும்பல் அரிவாள் வெட்டியது. இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர், பொதுச்செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் நாகப்பட்டினம் லோக்சபா தொகுதிக்குள் திருவாரூர் வருகிறது.

நாகப்பட்டினம் தொகுதியில் பாஜக சார்பில் எஸ்ஜிஎம் ரமேஷ் வேட்பாளராக போட்டியிட்டார். அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வி செல்வராஜ், அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர், நாம் தமிழர் சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் திருவாரூர் பாஜக நிர்வாகிகள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே காவனூர் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரின் பெயர் மதுசூதனன். இவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் பாஜக நிர்வாகியான இவர் திருவாரூர் பாஜக விவசாய அணி முன்னாள் மாவட்ட செயலாளராக செயல்பட்டுள்ளார். இந்நிலையில் தான் மதுசூதனன் நேற்று இரவு தனது வீட்டில் இருந்தார்.
அப்போது திடீரென்று வந்த கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் ஓடியது. இதில் படுகாயமடைந்த மதுசூதனன் உடனடியாக மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் மதுசூதனன் சார்பில் திருவாரூர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் மதுசூதனனை அரிவாளால் வெட்டியது தொடர்பாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்திலரசன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுபற்றி விசாரணை நடத்தியபோது தேர்தல் பணத்தை பங்கு பிரிப்பதில் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மற்றும் மதுசூதனன் இடையே பிரச்சனை இருந்துள்ளதாகவும், இந்த பிரச்சனையில் பாஸ்கர் உத்தரவில் பாஜக பொதுச்செயலாளர் செந்திலரசன் ஆட்களை செட் செய்து மதுசூதனனை வெட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications