இத்தனை வருஷமா ஏம்ப்பா என்னை பார்க்க வரலை.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸை பார்த்ததும் கேட்ட பெண்
நாகை: உன் குழந்தைகள் என்னை தாத்தானுதான் கூப்பிட வேண்டும் என சுனாமியால் பெற்றோரை இழந்த பெண்ணிடம் கண்டிஷனாக சொன்னார் ஐஏஎஸ் அதிகாரி.
தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு தாக்கிய சுனாமி பேரலையில் 6065 பேர் உயிரிழந்து நாகை மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக பேரிடர் பாதிப்பில் தாயையும், தந்தையையும் ஏராளமான குழந்தைகள் இழந்தனர்.
அப்போது நாகையில் அரசால் துவங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் 99 தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்கள். அந்த வகையில் நாகை செருகனூரை சேர்ந்த தமிழரசி என்பவரும் தாய் , தந்தையை இழந்து அந்த காப்பகத்தில் வளர்க்கப்பட்டார்.

12 ஆம் வகுப்பு
இவர் 12ஆம் வகுப்பு வரை காப்பகத்தில் தங்கி படித்தார். இதையடுத்து அவரை நாகையில் உள்ள கல்லூரியில் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன்தான் சேர்த்துவிட்டார். இன்று அந்த பெண் எம்சிஏ முடித்துவிட்டு பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணமாகி குழந்தைகளும் பிறந்துவிட்டன.

அன்னை சத்யா காப்பகம்
அன்னை சத்யா காப்பகத்தில் தத்தெடுத்த குழந்தைகளை ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸும் அவரது மனைவியும் அவ்வப்போது போய் பார்த்து வருவார்கள். அந்த குழந்தைகள் அனைவருமே இவரையும் இவரது மனைவியையும் அப்பா அம்மா என்றே அழைத்து வருகிறார்கள்.

கொரோனா பரவல்
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடுமையாக உழைத்தார். இதனால் அவரால் இத்தனை நாட்களாக அன்னை காப்பகத்தில் உள்ள குழந்தைகளை போய் பார்க்க முடியவில்லை.

ஆய்வு
இந்த நிலையில் அண்மையில் தமிழக அரசின் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை முதன்மை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் ஆய்வு மேற்கொள்ள சென்றிருந்தார்.

உரிமையோடு கேட்ட பெண்
அப்போது செருகனூரில் உள்ள அன்னை சத்யா காப்பகத்திற்கு சென்றார். அங்கு பெற்றோரை இழந்த சூழலிலும் மனம் தளராமல் எம்சிஏ படித்த தமிழரசி, வெளியே ஓடி வந்து , ராதாகிருஷ்ணனிடம் இத்தனை நாளா எங்களை பார்க்க ஏம்ப்பா வரலை என உரிமையோடு கேட்டார்.

தமிழரசி
தனக்கு பிறந்த குழந்தைகளை உங்களுக்கு காண்பிக்கிறேன் என கூறிய தமிழரசியிடம் ஜே ராதாகிருஷ்ணன், "உன் குழந்தைகள் என்னை தாத்தானுதான் கூப்பிடணும் சரியா" என்றார். அதற்கு அந்த பெண் ஆமாம்ப்பா எனக்கு நீங்கள் அப்பா என்றால் அவர்களுக்கு நீங்கள் தாத்தாதானே என்றார். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தாய் தந்தையை இழந்த சோகத்திலும் நம்பிக்கையை இழக்காமல் தமிழரசி எம்சிஏ படித்துள்ளார் என தெரிவித்தார். அது போல் தமிழரசியும் தன்னையும் காப்பக குழந்தைகளையும் ராதாகிருஷ்ணனும் அவரது மனைவியும் தந்தை- தாயை போல் பார்த்துக் கொண்டதையும் அவர் நினைவுக் கூர்ந்தார்.

திருமணம்
அதுபோல் சுனாமியின் போது பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற ராதாகிருஷ்ணன் பாலத்தின் அருகே அழுது கொண்டிருந்த 9 மாதம் மற்றும் 3 மாத குழந்தைகளான சவுமியா, மீனா ஆகியோரை தத்தெடுத்து வளர்ந்து வந்தார். இந்த நிலையில் சவுமியாவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது தலைமையில் திருமணத்தை நடத்தியதும் அவருக்கு பாராட்டுகள் குவிந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications