நாகை தொகுதியில் களமிறங்கும் தேசியக்கட்சியின் டெல்லி தல? சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்!
நாகை: நாகை நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்க விரும்பும் தேசியக்கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ள ஒருவர் அதற்கான முன்னோட்ட பணிகளை தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யார் அந்த தலைவர், எந்தக் கட்சி என்ற கேள்வி எழுவது புரிகிறது.
அவர் வேறுயாருமல்ல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா தான். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் டி.ராஜா. கல்லூரி படிப்பு முடிந்த கையோடு சென்னை, டெல்லி என சென்றுவிட்டார். ஆரம்பக் காலத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மூலம் தீவிர அரசியலுக்குள் நுழைந்த இவர், கடந்த 1995 ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராக பதவி வகித்தார்.

2019 ஆம் ஆண்டு சுதாகர் ரெட்டி ஓய்வை விரும்பியதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டு இப்போது வரை அந்தப் பதவியில் தொடர்கிறார்.
இதனிடையே 2007, மற்றும் 2013 ஆகிய காலகட்டங்களில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட டி.ராஜாவின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டுடன் முடிந்தது. இந்நிலையில் தேர்தல் அரசியல் பக்கம் பார்வையை திருப்பியுள்ள டி,ராஜா, தமிழ்நாட்டின் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை நாடாளுமன்றத் தொகுதியை திமுக ஒதுக்கியது.

இதனால் வரும் தேர்தலிலும் மீண்டும் நாகை தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே ஒதுக்குமா என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது. நாகை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று கணிசமான வாக்கு வங்கி இருப்பதும் கவனிக்கத்தக்கது. இதனால் டி.ராஜாவுக்கு திமுக தலைமை பச்சைக்கொடி காட்டிவிடும் எனத் தெரிகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டியும் டி.ராஜா தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் என்பது அவர் குறித்த கூடுதல் தகவலாகும்.












Click it and Unblock the Notifications