நாகையில் ஆடு திருடியவருக்கு தர்ம அடி.. புரட்டியெடுத்த மக்கள்… பரபரப்பு
நாகை : நாகை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தொடர்ந்து பல நாட்களாக இரவு நேரங்களில் ஆடு திருடிய திருடனை கட்டி வைத்து ஊர்மக்கள் புரட்டியெடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
Recommended Video
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரம் கவுண்டர்புரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் மீன்பிடித்தல் மற்றும் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அப்பகுதி மக்கள் வளர்த்து வந்த ஆடுகள் இரவு நேரங்களில் திருட்டு போவதாக தொடர் புகார்கள் இருந்து வருகிறது. பல ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் காணாமல் போனதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

தொடர்கதையான ஆடு திருட்டு
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் ஆடு திருடு போவதும் காவல்நிலையத்தில்; புகார் அளிப்பதும் தொடர்கதையாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது கொட்டகையில் இருந்த ஆட்டை மர்ம நபர்கள் சில தினங்களுக்கு முன்பு திருடி சென்றுள்ளனர். இதுகுறித்தும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கண்காணிப்பு பணியில் இளைஞர்கள்
இதையடுத்து ஆடு திருடர்களை பிடிக்கும் முயற்சியில் அவ்வூர் மக்களும் இளைஞர்களும் நேரடியாக களம் இறங்கினர். இரவு நேரங்களில் இளைஞர்கள் சுழற்சி முறையில் ஆடு திருடர்களை எப்படியாவது பிடிக்க வேண்டுமென கண்காணிப்பு பணியில் ஈடுபடத் தொடங்கினர். நேற்று இரவும் இளைஞர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், அதே பகுதியில் கல்லறை அருகே சிலர் சந்தேகம் அளிக்கும் வகையில் மது அருந்தி கொண்டு இருந்துள்ளனர்.

ஆடு திருடியவருக்கு தர்மஅடி
இதையடுத்து அவர்களிடம் கிராம மக்கள் விசாரணை நடத்தும்போது குடி போதையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் சிறப்பான முறையில் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் அவர்கள் தான் கடந்த சில நாட்களாக ஆடு திருடியதை உலறியுள்ளனர். இதனையடுத்து உஷாரன அவர்களை பிடிக்க முயன்றபோது, இருவர் தப்பி ஒடிய நிலையில் ஒருவர் மட்டும் சிக்கினார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அந்த இளைஞரை பிடித்து ஊரில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் அவரை தாக்கிய வீடியோவை சிலர் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.

வைரலான வீடியோ
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து தகவலறிந்த கீழையூர் போலீசார், விரைந்து சென்று ஆடு திருடியவரை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் ஆடு திருடிய நபர் வேளாங்கண்ணி பூக்காரர் தெருவைச் சேர்ந்த ராஜ்சின்னத்தம்பி என்பதும் இதேபோல் பல் ஆடுகளை திருடி நகர்ப்பகுதிகளில் விற்று பணத்தை மதுவுக்கு செலவு செய்து வந்ததும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை
இதையடுத்து ஆடு திருடிய ராஜ்சின்னத்தம்பி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஆடு திருடி தப்பிய இருவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடு திருடிய இளைஞரை ஊர்மக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications