“பைரேட்ஸ்”.. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்! அரிவாளால் வெட்டி அட்டூழியம்
நாகை: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்தி வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை பறித்துக்கொண்டு விரட்டியடித்து உள்ளனர்.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களான ராமேஸ்வரம், புதுக்கோட்டை, மயிலாடுதுரை, நாகை மாவட்ட மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடித்து வாழ்வாதாரத்தை தேடிக்கொள்கின்றனர். கோடிக்கணக்கானோர் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். ஆனால், கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடுக்கடலில் தாக்குகுவது, படகுகள், வலைகளை சேதப்படுத்துவது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, கைது செய்வது போன்ற அத்துமீறல்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கடற்படை மட்டுமின்றி இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழ்நாடு மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க பல முறை மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தடை காலம் முடிந்து தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்கு சென்றதில் இருந்தே வாரம் ஒரு முறை அல்ல 2 முறை தாக்குதல், கைது சம்பவங்களில் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது கோடூரமான தாக்குதலை நடத்தி உள்ளார்கள். அரிவாளால் தாக்கியதில் மீனவர்கள் சத்யராஜ், வேல்முருகன், கோடிலிங்கம், மணியன் ஆகியோர் காயமடைந்தனர்.
அத்துடன் அவர்கள் வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன் பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகளையும் அவர்கள் பறித்துச் சென்று உள்ளார்கள். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவும் இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகையை சேர்ந்த மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர். அதற்கு ஒரு வாரம் முன் இலங்கை கடற்படை ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களை விரட்டியடித்தது. செப்டம்பர் மாதம் மட்டும் இப்படி 4 - 5 முறை மீனவர்கள் தாக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications