மீனவர்களின் வலைகள், செல்போன்களை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்.. நடுக்கடலில் அட்டூழியம்!
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை பகுதி மீனவர்களின் வலைகள், செல்போன்கள், வாக்கி டாக்கி உள்ளிட்டவற்றை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை தாக்கி, உடைமைகளை இலங்கை கடல் கொள்ளையர்கள் திருடிச் சென்றதால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. ஒருபுறம் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைக்கும், இன்னொருபுறம் இலங்கைக் கடல் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

ஆறுக்காட்டுதுறையில் இருந்து சென்ற 5 மீனவர்கள் கடலில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 400 கிலோ வலைகளை அறுத்துக்கொண்டு கொள்ளையடித்து சென்றனர். ரூ.2 லட்சம் மதிப்பிலான வலைகளை பறிகொடுத்து வெறும் கையுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.
இதேபோல, கோடியக்கரையில் சென்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, மீனவர்களின் வாக்கி டாக்கி, செல்போன்கள், வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளனர். நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவங்கள் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.












Click it and Unblock the Notifications