அந்த 2 பேரை பார்த்திருக்காவிட்டால் ''கலைஞர்'' கம்யூனிஸ்ட் தலைவர்! திருமண விழாவில் ஸ்டாலின் ருசிகரம்!
நாகை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுகவுக்கும் எப்பொழுதும் நட்பு உண்டு என்றும் பெரியாரையும், அண்ணாவையும் ''கலைஞர்'' சந்தித்திருக்காவிட்டால் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் தான் இருந்திருப்பார் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடனான கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என்ற உறுதியை திருமண விழாவில் அளித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்ல மணவிழாவில் இது குறித்து ஸ்டாலின் பேசியதாவது;
''நாகை மாவட்டத்திற்கு ஒளியாகவும், மதியாகவும் இருக்கிறார் நம்முடைய செல்வராஜ் அவர்கள். 1975-இல் இருந்து தன்னை இந்த இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைத்துக் கொண்டு ஏறக்குறைய 48 ஆண்டுகாலமாக இந்த இயக்கத்திற்காக உழைத்துக் கொண்டிருப்பவர்.
செல்வராஜ் பல பெரிய பொறுப்புகளை, பல பதவிகளில் எல்லாம் இருந்து கடமைகளை ஆற்றிக் கொண்டிருந்தாலும், ஒரே வரியில் அவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவர் ஒரு மக்கள் தொண்டராக இருந்து தன்னுடைய கடமையைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
ஏழு முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் நம்முடைய செல்வராஜ் அவர்கள். அதில் நான்கு முறை, அதாவது 1989 - 1996 - 1998 - 2019 - இந்த ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அவர் எம்.பி.ஆக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். இந்த நான்கு முறை வெற்றி பெற்றார் என்றால், தி.மு.க.வின் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறார் என்பதுதான் எங்களுக்கு இருக்கும் சிறப்பு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் - தி.மு.க.விற்கும் எப்பொழுதும் நட்பு உண்டு, அன்பு உண்டு. கலைஞர்தான் அடிக்கடி சொல்வார், பெருமையோடு சொல்வார். தந்தை பெரியாரை நான் பார்த்திருக்காவிட்டால், அறிஞர் அண்ணாவை நான் சந்தித்திருக்காவிட்டால், நான் கம்யூனிஸ்ட் கட்சியில் தான் இருந்திருப்பேன் என்று பலமுறை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
எனவே அந்த உணர்வோடு நம்முடைய நட்பு, தேர்தலுக்காக நட்பு மட்டுமல்ல, கூட்டணியில் இருக்கும் நேரத்தில் ஏற்படும் நம்பு மட்டுமல்ல, கொள்கை நட்பு. அதுதான் முக்கியம். எதிர்கட்சியாக இருந்தபோதும் சரி, இப்போது ஆளுங்கட்சியாக இருக்கிறபோதும் தொடர்கிறது. தொடர்கிறது என்றால், இது என்றைக்கும் தொடரும். உறுதியாக சொல்கிறேன், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாகத் தொடரும் என்பதை இந்த திருமண விழா பகிரங்கமாக அறிவிக்கிறேன்.''












Click it and Unblock the Notifications