நாகையில் வாகன சோதனை செய்த போலீஸ்.. மாரிமுத்துவுக்கு வந்ததே அப்படி ஒரு ஆத்திரம்.. நடந்ததை பாருங்க
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது எந்த ஆவணங்களும் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வந்த மாரிமுத்து என்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் புதுச்சேரியில் விற்கப்படும் மதுபாட்டில்கள் இருந்துள்ளது. மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. போலீசிடம் சிக்கிய ஆத்திரத்தில் அவர் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம் நகரத்தில் நீலாதெற்கு வீதியில் நேற்று முன்தினம் மாலையில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள் அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் ஒரு இருசக்கர வாகனம் வந்தது. அதனை அவர்கள் வழிமறித்தனர்.
தொடர்ந்து அந்த பைக்கை சோதனை செய்து பார்த்த போது, அதில் எந்த ஆவணங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. உடனே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், நாகை கீழ்வேளூர் அருகே வடகாலத்தூர் பகுதியை சேர்ந்த 24 வயதாகும் மாரிமுத்து என்பது தெரியவந்தது. மேலும் அவரது வாகனத்தில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரன மாரிமுத்து ஆத்திரம் அடைந்து, மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து தனது கையை சரமாரியாக கிழித்து கொண்டார். இதில் ரத்தம் கொட்ட தொடங்கியது. அவ்வாறு வந்த ரத்தத்தை அந்த வாலிபர் அங்கு நின்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது தெளித்தார். மேலும் போலீசாரிடம் மாரிமுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதனை அடுத்து பொதுமக்களும், போலீசாரும் கத்தியுடன் இருந்த மாரிமுத்துவை மடக்கிப்பிடித்து ஆட்டோவில் ஏற்றி நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாரிமுத்து போதையில் இருப்பதாக கூறினார்கள். தொடர்ந்து டாக்டர்கள் மாரிமுத்துவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications