அதிர்ச்சியடைய வைத்து விட்டது.. கன்னியாகுமரி பஸ் நடத்துநர் அடாவடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்யும் பெண்மணியை அரசு பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பஸ் நிலையத்தில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு அடாவடி சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வந்தது.
அந்த வீடியோவில் இருக்கும் சம்பவம் இதுதான்.

குளச்சல் பஸ் நிலையம்
மீன் விற்பனை செய்யும் பெண்மணி ஒருவர், மீன் கூடையுடன் பஸ்ஸில் ஏறி வழக்கம்போல பயணம் செய்வதற்கு வந்துள்ளார். மீன் நாற்றம் அடிப்பதாக கூறி நடத்துனர் அவரை கீழே இறக்கி விட்டுள்ளார். காலையில் தலையில் சுமையாக மீன்களை சுமந்து கொண்டு வந்து குளச்சல் அருகே உள்ள கிராமங்களில் அவற்றை விற்பனை செய்து விட்டு மீதமுள்ள மீன்களை குளச்சல் மார்க்கெட்டில் விற்பனை செய்வது இந்த பெண்மணியின் வழக்கமாக இருந்துள்ளது.

இலவச அரசு பஸ்
சம்பவத்தன்று மீன்களை விற்பனை செய்த பிறகு, மகளிருக்கான அரசு இலவச பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போதுதான் மீன் கூடையிலிருந்து வாடை வருவதாக கூறி, அவரை பயணிக்க அனுமதிக்க முடியாது என்று நடத்துனர் கீழே இறக்கி விட்டுள்ளார்.

பெண்மணி
நடத்துநர் திட்டியதால் அவமானம் அடைந்த அந்த பெண்மணி, பேருந்து நிலைய நேர கட்டுப்பாட்டு அலுவலரிடம் சென்று அழுதபடியே புகார் கொடுத்தார். மேலும் அங்குமிங்குமாக அழுகையுடன் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கண்டனங்கள்
இதை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து அதை வெளியிட, அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதைப் பார்த்த பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்த நிலையில், பேருந்தின் ஓட்டுனர் மைக்கேல், பேருந்து நடத்துனர் மணிகண்டன், நேர கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பதிவு, வெளியிட்டு இருக்கிறார்.

முதல்வர் அதிர்ச்சி
முதல்வர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: கன்னியாகுமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications