புதுப்பெண் கொடூர கொலை.. கணவனின் வீட்டுக்கு உடலோடு வந்து.. வித்தியாசமான பழிவாங்கல்.. கிராமமே ஷாக்
நாகர்கோவில்: கல்யாணமான எட்டு மாதத்தில் மனைவியை கத்தியால் குத்தி கணவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை பழிவாங்க புதுப்பெண்ணின் உடலை அவரது வீட்டு வாசலிலேயே உறவினர்கள் புதைத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடியைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் கட்டிட காண்டிராக்டராக உள்ளார். இவர் தனது மகள் ஜெனிலா ஜோபியை (வயது 23). கருங்கல் திப்பிரமலையைச் சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.

பெங்களூருவில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சேம் மரியதாஸ் பணியாற்றி வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ஜெனிலா ஜோபியும் பெங்களூருவில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் சேம் மரியதாசுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதுபற்றி ஜோபிக்கு தெரியவரவே கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.
கடந்த 11-ந்தேதி இரவு ஜெனிலா ஜோபி வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். நள்ளிரவு அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென எழுந்த அவரது கணவர் சேம் மரியதாஸ், அவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கர்நாடக மாநிலம் தொட்டாபள்ளபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சேம் மரியதாசை கைது செய்தனர். பின்னர் ஜெனிலா ஜோபியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வந்துள்ளனர். ஜெனிலா ஜோபியின் உடலை பெற்றோர் வீட்டில் புதைக்காமல், கணவரின் வீட்டின் முன்பகுதியில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தார்கள். கணவர் வீட்டில் உடல் அடக்கம் செய்ய அவரது வீடு அமைந்துள்ள கருங்கல் திப்பிரமலை பகுதிக்கு உடலை கொண்டு சென்றார்கள் அந்த வீட்டில் தற்போது சேம் மரியதாஸின் பாட்டி மட்டுமே வசித்து வருகிறார். இதனை தொடர்ந்து புதுப்பெண்ணின் உடலை வீட்டின் வளாகத்தில் வாசல் முன்பு அடக்கம் செய்தனர்.
இதையறிந்து அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க போலீசாரும் குவிக்கப்பட்டனர். பெங்களூருவில் குத்திக்கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கணவரின் வீட்டின் முன்பு அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது. சேம் மரியதாஸ் செய்த கொடூர செயலுக்கு பழிவாங்கும் விதமாக அவருடைய வீட்டிலேயே புதுப்பெண்ணின் உடலை உறவினர்கள் புதைத்துள்ளதாக போலீசார் விசாரணைக்கு பின்னர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications