ஒரே இடத்தில் குவிந்த மேயர்கள், கவுன்சிலர்கள்.. பிரமாண்ட மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
நாமக்கல் : திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாமக்கல்லில் சற்று முன்பு தொடங்கி வைத்துள்ளார்.
"உள்ளாட்சியிலும் நல்லாட்சி" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுக இளைஞரணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு
தி.மு.க நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நாமக்கல்லில் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

பிரமாண்ட ஏற்பாடுகள்
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று கரூரில் இருந்து கார் மூலமாக நாமக்கல் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் திரண்டு இருந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த மாநாட்டிற்காக நாமக்கல் - சேலம் சாலை பொம்மைகுட்டைமேடு பகுதியில் பிரமாண்ட மேடை பந்தல் அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் உணவு அருந்தும் வகையில் மாநாட்டு திடலில் பெரிய அளவிலான கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சற்று முன்பு தொடங்கியுள்ள இந்த மாநாடு மாலை 5.30 மணி வரை மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டில் எம்.பிக்கள் சிறப்புரை
இந்த மாநாட்டில்,மத்தியில் கூட்டாட்சி-மாநிலத்தில் சுயாட்சி என்ற தலைப்பில் திமுக எம்பி ஆ.ராசா, தி.மு.க உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில் திமுக எம்.பி திருச்சி சிவா, இதுதான் திராவிட இயக்கம் என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன், திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, பெண்களின் கையில் அதிகாரம் என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை
இதனைத் தொடர்ந்து, மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை 'மக்களோடு நில், மக்களோடு வாழ்' என்ற தலைப்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றுகிறார். அதன் பின்னர்,மாலை 4 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டின் இறுதியாக அமைச்சர் மதிவேந்தன் நன்றியுரை கூறுகிறார்.












Click it and Unblock the Notifications