"இரவெல்லாம் தூங்க முடியலை".. சீமான் மீது நாமக்கல் எஸ்பியிடம் புகார்.. யார் இந்த பெண் வழக்கறிஞர்?
நாமக்கல்: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நாமக்கல் எஸ்பியிடம் பெண் வழக்கறிஞர் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். எனது தலைவர் கருணாநிதி பற்றிய கேவலமாக பேசி பாடல் பாடியதால் இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. சீமான் மீது தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் கைது செய்யப்படுகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா டொபசிட் இழந்தார்.

முன்னதாக இந்த தொகுதியின் இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து விமர்சனம் செய்து பாடல் ஒன்றை பாடினார். அந்த பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதுபற்றிய புகாரின் திருச்சி போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் சாட்டை துரைமுருகன் கைதுக்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் சாட்டை துரைமுருகன் பாடிய அதே பாடலை அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பாடி காண்பித்தார். அதுமட்டுமின்றி முடிந்தால் என்னை கைது செய்யுங்க பார்ப்போம் என திமுக அரசுக்கு சவால் விடுத்தார்.
இந்நிலையில் தான் சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக தான் கருணாநிதி குறித்து அவதூறான பாடல் பாடிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமுதா என்ற பெண் வழக்கறிஞர் நாமக்கல் எஸ்பியிடம் பரபரப்பான புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி அமுதா கூறுகையில், ‛‛எங்கள் தலைவர் கருணாநிதி பற்றி ரொம்ப கேவலமாக பேசி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடல் பாடியுள்ளார். தரக்குறைவாக பேசிய சீமான் மீது நடவடிக்கை கோரி புகாரளித்துள்ளேன். கருணாநிதி தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் அவர் ஆற்றிய தொண்டு என்பது இனி யாராலும் செய்ய முடியாதது. அப்படிப்பட்ட மாபெரும் தலைவரை சீமான் இப்படி பேசுவது எங்களை போன்றவர்களை புண்படுத்துகிறது.
இரவில் தூங்க முடியலை. ஏதோ பேசிவிட்டதாக கூறி சுப்பிரமணியசாமியை ஏர்போர்ட்டில் இறங்கவிடாமல் விரட்டியடித்தனர். அதேபோல் கருணாநிதியை இப்படி பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்த்தேன். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் நான் புகார் அளித்துள்ளேன் '' என்றார்.
இப்படி சீமான் மீது சென்னை, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அமைச்சர் சேகர்பாபு, ‛‛சீமான் தொடர்ந்து வாய்க்கொழுப்புடன் பேசி வருகிறார். அவரது உயரம் அவருக்கே தெரியவில்லை.
கண்ணாடி கூண்டிலிருந்து கல் எறிந்து கொண்டிருக்கிறார். திமுக கற்கோட்டை, திரும்ப தாக்க வேண்டும் என்று நினைத்தால் அவர் தாங்க மாட்டார். சீமான் மீது பொதுநல விரும்பிகள் புகார் கொடுத்து வருகின்றனர். சட்டப்படி சாத்திய கூறுகள் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தார். இதனால் சீமான் மீது நடவடிக்கை பாய்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications