வெறும் 525 கிராம் குழந்தை உயிருடன் பிழைத்த அதிசயம்! நாமக்கல் போலவே டெல்லியில் மிராக்கிள் ஆச்சரியம்
நாமக்கல்: பிறப்பு எடை 525 கிராம் மட்டுமே இருந்த பச்சிளம் குழந்தையை டாக்டர்கள் போராடி காப்பாற்றியிருக்கிறார்கள்.. குறை மாதத்தில் பிறந்த குழந்தையை எப்படியாவது மீட்டு தந்துவிடுங்கள் என்று பெற்றோர் உருகி கேட்ட நிலையில், டெல்லி டாக்டர்கள் கடும் முயற்சி எடுத்து குழந்தையை மீட்டுள்ளனர்.. என்ன நடந்தது டெல்லி மருத்துவமனையில்?
2 வருடங்களுக்கு முன்பு நாமக்கல்லில் இந்த சம்பவம் நடந்தது.. கணேசபுரத்தைச் சேர்ந்த சாதனா - விக்னேஷ் தம்பதியினருக்கு சேலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன.

குழந்தைகள் மிகவும் எடை குறைவு (Incredible Low Birth Weight), அதீத குறைப் பிரசவ குழந்தைகளுக்கு (Extreme Preterm. 25- 26 Weeks) அதே மருத்துவமனையில் 1 மாத சிகிச்சை தந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பல லட்சங்கள் செலவும் ஆகிவிட்டது.
நாமக்கல் - குறை பிரசவம்
அதனால் குழந்தையின் பெற்றோர்கள் குழந்தைகளை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஓரிரு நாளில், இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை இறந்து விட்டது.. அந்த குழந்தையின் எடை 720 கிராம் மட்டுமே இருந்தது.
எனவே இரண்டாவது குழந்தையையாவது காப்பாற்றியே தீர வேண்டும் என்று பெற்றோர் தவியாய் தவித்தனர்.. இந்த குழந்தை வெறும் 525 கிராம் மட்டுமே இருந்தது.
எடை குறைந்த குழந்தை
இறுதியில் அம்மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் குழந்தைகள் துறைத் தலைவரின் ஆலோசனை மற்றும் அறிவுரையின் பேரில் சிகிச்சைகள் வெகு கவனமாக மேற்கொள்ளப்பட்டன. 80 நாட்களுக்கும் மேலாக தீவிர கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் இருந்த முதல் குழந்தையின் எடை ஒரு கிலோவுக்கு (1.3 Kg) மேல் அதிகமானது. இது பெற்றோர்களுக்கு அளவிலாத மகிழ்ச்சியை அப்போது ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து குழந்தைகள் நல மருத்துவர்கள் சொல்லும்போது, "இவ்வளவு எடை குறைவான குறைமாத குழந்தைகளை காப்பாற்றுவது என்பது மிகவும் கடினமான காரியம்.
எதிர்நோக்கும் சவால்கள்
இதுபோன்ற குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் வளர்ச்சி குறைபாடு (RDS), இருதய குறைபாடு (PDA), சரியாக பால் குடிக்க முடியாமல் போதல், டியூப் வழியாக கொடுக்கும் பாலையும் சரியாக செரிமானம் செய்ய முடியாத தன்மை (FEED INTOLERANCE), எதிர்ப்பு சக்தி இல்லாத காரணத்தால் தீவிரமான கிருமித் தொற்று ஏற்படுதல் (SEVERE SEPSIS), அதீத ரத்தசோகை (ANEMIA OF PREMATURITY), திடீரென்று மூச்சு நின்று போவது (APNEA OF PREMATURITY) போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
பின்னாளில் மூளை வளர்ச்சிக் குறைபாடு (CP/MR), பார்வைக் குறைபாடு (ROP),சரியாக காது கேட்பதில் குறைபாடு (HEARING DEFECTS) போன்ற பிரச்சினைகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த குழந்தைக்கு பார்வை குறைபாடு அறிகுறி கண்டறியப்பட்டு சிகிச்சையும் தரப்பட்டு குணமாகிவிட்டது.. அரசு மருத்துவமனை என்றும் பாராமல் இங்கு குழந்தைகளை சிகிச்சைக்காக அனுமதித்த பெற்றோர்களுக்கு எங்கள் நன்றி" என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
வெறும் 525 கிராம்
இப்போது கிழக்கு டெல்லியில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.. கிழக்கு டெல்லியின் பத்பர்கஞ்ச் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சாஹில் தனேஜா - திவ்யா.
இந்த தம்பதிக்கு ஆரம்பத்தில் இருந்தே குழந்தை பிறப்பதில் சிக்கல் இருந்துவந்தது.. எனவே செயற்கை கருத்தரிப்பில் திவ்யா கர்ப்பமானார்.
ஆனால், அவருக்கு 22 வாரங்களில் பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது.. இதனால் ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.. 22 வாரங்களில் பிறந்துள்ள அந்த பெண் குழந்தை வெறும் 525 கிராம் எடையுடன் காணப்பட்டது..
டாக்டர்கள் ஆச்சரியம்
உடனடியாக, பிறந்த குழந்தையை ஐசியூவில் வைத்து பாதுகாப்பாக பராமரித்தனர்... இப்போது 105 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், குழந்தையின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.. அந்த குழந்தை இப்போது 2.010 கிலோ எடையுடன் உள்ளதாம்.
இதுபோன்ற சூழல்களில் குழந்தை தப்பி பிழைப்பது அரிதிலும் அரிதான விஷயம் என்கிறார்கள் டாக்டர்கள்.. நவீன சிகிச்சை, சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பெற்றோரின் ஈடுபாடு போன்ற காரணங்களால், குழந்தைகள் தப்பி பிழைக்கும் சாத்தியம் உள்ளது என்றும் ஆச்சரியத்துடன் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications