திமுக தலைவர் தேர்தல் முடியட்டும்.. இன்னும் பலர் விலகுவார்கள்.. ட்விஸ்ட் வைக்கும் விபி துரைசாமி!
நாமக்கல்: திமுக தலைவர் தேர்தலுக்கு பின் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவார்கள் என்று பாஜக துணைத் தலைவர் விபி துரைசாமி தெரிவித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச்செயலாளராக செயல்பட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் அண்மையில் திமுகவில் இருந்து விலகினார். இதனால் திமுகவை பல்வேறு கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர்.
இதேபோல் திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த விபி துரைசாமி, இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இருந்து விலகினார். பின்னர் பாஜகவில் இணைந்த அவர், திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

பலர் வெளியேறுவார்கள்
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக துணை தலைவர் விபி துரைசாமி கூறுகையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி உள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் நான் விலகியபோது பல்வேறு கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டேன். தற்போது மேலும் ஒருவர் விலகியிருப்பது திமுக தலைமைக்கும், தொண்டர்களுக்குமான நெருக்கம் குறைந்து வருவதை தான் பிரதிபலிக்கிறது. வரும் 9ம் தேதி திமுக தலைவர் தேர்தலுக்குப் பின்பு இன்னும் பலர் அக்கட்சியிலிருந்து வெளியேறுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்துக்களுக்கு எதிரான கட்சி
தொடர்ந்து, இந்துக்களைப் பற்றி அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ.ராசா மீது எவ்வித நடவடிக்கையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கவில்லை. வாக்கு வங்கிக்காக ஆன்மிக அரசியல் பேசும் முதல்வர் ஸ்டாலின், முதலில் விநாயகர் சதுர்த்திக்கும், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி உள்ளிட்ட இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறட்டும். அதேபோல் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கூறுகையில், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது சட்டத்தை மீறுவதாக உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத நல்லிணக்கதத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர். தமிழகத்தில் மத நல்லிணக்கம் நன்றாக இருக்கும் போது மனித சங்கலி எதற்கு என்று தெரியவில்லை.

வெடிகுண்டு கலாச்சாரம்
அதனால் தான் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் பாஜகவின் கொள்கைகளை ஏற்று உறுப்பினராக இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி வருவதாக கூறி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தாலே, வெடிகுண்டு கலாசாரம் பரவுவது வாடிக்கை தான் என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications