திமுக கூட்டணிக்கு மற்றொரு கட்சி ஆதரவு.. 40 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்ற நாகை திருவள்ளுவன் திட்டம்!
நாமக்கல்: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணிக்கு நாகை திருவள்ளுவனின் தமிழ் புலிகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

திமுக தமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள 4 கட்சிகளுக்கு தொகுதிகளையும் ஒதுக்கிவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, மநீம உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தை நீடிக்கிறது. விரைவில் இந்தக் கட்சிகளுக்கும் சீட்கள் ஒதுக்கப்பட்டு, தொகுதி உடன்பாடு இறுதி வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவையும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்ற உள்ளதாக தமிழ் புலிகள் கட்சி அறிவித்துள்ளது. தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பொம்மைகுட்டைமேட்டில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் மாநில உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதிவேந்தன், திமுக எம்.பி ராஜேஷ் குமார், அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் நாகை திருவள்ளுவன் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “அடைக்கப்பட்ட மூட்டைகளில் உள்ள நம் சமூகம் பல்வேறு உரிமைகளை பெற வேண்டியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் போல் உள்ளவர்கள் ஆளும் போது தான் நமது உரிமைகளை பெற முடியும். பாஜகவினர் ஆளும் போது மாநில உரிமைகளை யாரிடமிருந்து மீட்பது? மாநில உரிமைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு பறிக்க முயற்சி செய்கிறது.
மோடியின் ஆட்சி குறித்து பாஜகவினர் பெருமையாக கூறினாலும், கடந்த 10 ஆண்டுகளில் கூறிய வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என கூறினார்கள். ஆனால், பொருளாதாரத்தில் பெரிதாக வளர்ச்சி ஏற்படவில்லை. கடந்த 10 ஆண்டு ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி என்பது 7.5% உள்ளது.
தமிழுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்து சமஸ்கிருதத்திற்கு நிதி ஒதுக்கும் இந்த அரசு யாருக்காக ஆட்சி செய்கிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது. தமிழ் மொழியை பாதுகாக்க தான் தமிழ் புலிகள் கட்சி இந்த மாநாட்டை நடத்துகிறது. மாநிலங்களூக்கு தனியாக உள்ள அதிகாரங்கள் இருக்க கூடாது என பாஜகவினர் நினைக்கிறார்கள். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நமது முழு அதிகாரமும் பறி போகும்” எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications