நாமக்கலில் 1 வீட்டிற்கு 5000, 4 வீட்டிற்கு 20000.. ஒரே நிமிடத்தில் சம்பாதித்த அரசு ஊழியர்.. ட்விஸ்ட்
நாமக்கல்: புதிய மின் இணைப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், சொத்து வரி நிர்ணயம், பட்டா பெயர் மாற்றம், நில அளவை என வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தான் இன்றைக்கு சில அதிகாரிகள் லஞ்சம் கேட்டு கைதாகுவது அதிகமாக நடக்கிறது. நாமக்கல்லில் சொத்துவரியை பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இன்றைக்கு சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய சில அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். பொதுவாக சொத்தின் உரிமையாளர் மாறியவுடன் (விற்பனை, தான செட்டில்மென்ட் அல்லது வாரிசு உரிமை), சம்பந்தப்பட்ட மாநகராட்சி அல்லது நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய ஆவணங்கள்
இதற்கு கிரயப் பத்திரம் அல்லது தான செட்டில்மென்ட் பத்திரத்தின் நகல், வில்லங்கச் சான்றிதழ், முந்தைய சொத்து வரி ரசீதுகள், வாரிசுரிமை மூலம் மாற்றம் செய்யப்படுவதாக இருந்தால், வாரிசுச் சான்றிதழ் ஆகியவை தேவைப்படும். ஆனால் நாமக்கல் மாநகராட்சியில் 4 வீடுகளுக்குப் பெயர் மாற்றம் செய்ய, ஒரு வீட்டிற்கு ₹5,000 வீதம் மொத்தம் ₹20,000 லஞ்சம் கேட்ட வருவாய் உதவி ஆய்வாளர் சங்கர் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
என்ன நடந்தது
விவசாயி நாமக்கல் மாநகராட்சிக்குப்பட்ட சின்ன அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 57 வயதாகும் கதிர்வேல் என்ற விவசாயிக்கு சொந்தமாக அப்பகுதியில் 4 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளைத் தனது மகன் பெயருக்கு அவர் எழுதி கொடுத்திருக்கிறார். எனவே சொத்து விவரத்தில் பெயர் மாற்றம் செய்து வரி விதிக்க வேண்டும் என நாமக்கல் மாநகராட்சியில் வருவாய் உதவி ஆய்வாளராக (பில் கலெக்டர்) பணியாற்றி வரும் சங்கர் (56) என்பவரை அணுகியிருக்கிறார்.
ஒரு வீட்டிற்கு 5000
ரூ. 20 ஆயிரம் லஞ்சம் சொத்து வரியை மாற்றம் செய்ய ஒரு வீட்டிற்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வருவாய் உதவி ஆய்வாளர் சங்கர் கூறினாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிர்வேல் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் பில் கலெக்டர் குறித்து புகார் செய்தார்.
இதையடுத்து போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூ. 20 ஆயிரத்துடன் நேற்று கதிர்வேல், மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அருகில் உள்ள டீக்கடைக்கு அவரை வரவழைத்த சங்கர் அங்கு ரூ. 20 ஆயிரத்தை லஞ்சமாக வாங்கியதாக சொல்லப்படுகிறது.
மாநகராட்சி ஊழியர் கைது
அதைத் தொடர்ந்து நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் தனது அறைக்குச் சென்ற சங்கரை, மறைந்து இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் கையும், களவுமாகப் பிடித்து அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications