தொப்பியோடு பள்ளிப்பாளையத்தில் யாரது? கிட்னி இல்லாமல் நாமக்கல்லில் நடமாடும் பெண்கள்? ஆனந்தன் எங்கே
நாமக்கல்: நாமக்கல்லில் ஏழை விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து சிறுநீரகங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இவர்களின் வறுமையை தெரிந்து கொண்டு கடந்த 10 வருடங்களாகவே, கும்பல் ஒன்று கிட்னி மோசடியில் இறங்கியிருக்கிறது.

மூளைச்சலவை புரோக்கர்
தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, கிட்னி விற்பனையிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.. குறிப்பாக, பள்ளிப்பாளையம் அன்னை சத்யா நகரில் கிட்னி புரோக்கர் ஆனந்தன் என்பவர், கிட்னி விற்பனையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் கசியவும்தான், தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க துவங்கியிருக்கிறது. .
இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிபாளையத்தை சேர்ந்த கவுசல்யா என்ற பெண் தன்னுடைய சிறுநீரகத்தை ரூ.6 லட்சத்துக்கு விற்பனை செய்திருக்கிறாராம்... எனவே, சுகாதாரத்துறை அதிகாரிகள், கவுசல்யாவிடம் விசாரணை நடத்தியபோதுதான், புரோக்கர் ஆனந்தன் என்பவர் மூலம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிறுநீரகம் எடுக்கப்பட்டதாகவும், அதற்காக தனக்கு ரூ.6 லட்சம் தந்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
விஜயா, கவுசல்யா
அதுமட்டுமல்ல, பக்கத்து வீட்டை சேர்ந்த விஜயா என்ற பெண்ணும் தன்னுடைய சிறுநீரகத்தை ரூ.6 லட்சத்துக்கு கொடுத்தது தெரியவந்துள்ளது.. இப்படி பள்ளிப்பாளையத்தில் மட்டும் 6 பெண்கள் சிறுநீரகத்தை விற்றிருக்கிறார்களாம்.
பெண்களின் சிறுநீரகத்தை விற்ற புரோக்கர் ஆனந்தன், ஆலாம்பாளையம் பேரூரை சேர்ந்த ஆனந்தன் என்பதும், பள்ளிபாளையம் ஒன்றிய திமுகவில், ஆலாம்பாளையம் பேரூர் கழக பேச்சாளராக இருப்பதும் தெரியவந்தள்ளது.. ஆனால், ஆனந்தன் எங்கே என்று தெரியவில்லை.. அவரை போலீசார் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தேடிவருகிறார்கள்.
அதேபோல, கிட்னி விற்பனை தொடர்பாக, கடந்த 18-ம் தேதி சென்னை சுகாதாரத் துறை சட்ட இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பள்ளிபாளையத்திற்கு நேரில் சென்று, கிட்னி விற்பனை செய்த பெண் உட்பட 5 பேரிடம் விசாரணை நடத்தினார்கள்..
ஈரோடு கிட்னி விற்பனை
அவர்கள் அளித்த தகவலின்படி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடைவிதித்து சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். அதுபோலவே, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றையும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லால், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த ஒருவர் தனது கிட்னியை பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் விற்பனை செய்ததாக பேசிய ஆடியோ மற்றும் வீடியோ வெளியாகியிருப்பதால், அதன் உண்மைத்தன்மை குறித்தும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
கவுசல்யாவுக்கு ரூ.6 லட்சம்
கிட்னி விற்பனை மோசடி தொடர்பாக நாமக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "கவுசல்யாவிடம் நடத்திய விசாரணையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை நடந்ததாகத் தெரிகிறது என்றார்.
"சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று, அறுவை சிகிச்சை செய்தவர்களின் பட்டியல் அனைத்தும் சேகரிக்கப்பட்டன. அதில், 6 பேரின் ஆவணங்களை வாங்கி சரிபார்த்ததில்,கவுசல்யா தவிர, மற்ற அத்தனை முகவரிகளும் போலியாக இருந்தன..
கவுசல்யா, 6 லட்சம் ரூபாய்க்கு தன்னுடைய ஒரு கிட்னியை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விற்றுள்ளார்.. கவுசல்யாவின் வாக்குமூலம், உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டிருக்கிறது. இதுகுறித்த முழு தகவல்களையும் வெளியில் சொல்ல முடியாது. அதேபோல, மற்றொரு பெண் விஜயா, குமாரபாளையத்தில் உள்ளார். அவரிடம் இன்னும் விசாரணை நடத்தவில்லை..
தொப்பியுடன் ஆனந்தன்
சிறுநீரக விற்பனை புரோக்கர் ஆனந்தன், தலையில் தொப்பியுடன் ஸ்கூட்டரில் அன்னை சத்யாநகர் பகுதிக்கு வந்து சென்றிருக்கிறார்.. இதைக் கேள்விப்பட்டதுமே பள்ளிப்பாளையம் போலீசார் அங்கு சென்றுள்ளனர்.. ஆனால், அதற்குள் ஆனந்தன் அங்கிருந்து தப்பித்துவிட்டார். அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதனிடையே, கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர் பள்ளிபாளையத்தில் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது..
அதேபோல, தொழிலாளர்கள் தங்களது கிட்னியை விற்பனை செய்வதற்கு அடிப்படையாக இருப்பது கந்துவட்டி மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடன் நெருக்கடிகளே காரணமாகும். எனவே, இதுசம்பந்தமான உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று ஏஐடியுசி நாமக்கல் மாவட்ட குழுவினர்,பள்ளிபாளையம் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.
ஆனந்தன் எங்கே?
வழக்கமாக ஒருவர் சிறுநீரகம் தானம் செய்ய வேண்டுமானால், அவரிடம் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரிப்பார்கள்.. எனவே, இவைகளுக்கேற்றார்போல, கிட்னி விற்பவர்களை தயார் செய்தது ஆனந்தன்தானாம்..
பள்ளிபாளையம் பகுதியில் இதுவரை ஏராளமான பெண்களிடம் சிறுநீரகம் எடுத்து மோசடி நடத்தியதும் இவரேதான்.. கிட்னி விற்போருக்கு சொற்ப பணத்தை தந்துவிட்டு, மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்து வந்ததும் இந்த ஆனந்தன்தான்.. எனவே, ஆனந்தன் கிடைத்தால்தான், அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications